திருப்பதி: திருப்பதியில் சந்திரகிரி தொகுதிக்குள்பட்ட கிராமத்தில் தொடர் தீவிபத்துகள் நடந்த விவகாரத்தில் மர்மத்தை கண்டுபிடித்த போலீஸார் அது தொடர்பாக 19 வயது பெண்ணை கைது செய்தனர். ஆந்திராவின் சந்திரகிரிக்குள்பட்ட கிராமம் புதிய சேனம்பட்லா. பெரிய கிராமமான இங்குள்ள வீடுகளில் ஒரு சில பொருட்கள் மட்டும் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்தன. தொடர்ந்து சில வீடுகளில் மட்டும் இப்படி தீப்பிடித்து எரிந்து வந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளார்கள் என கருதி, நாள்தோறும் அச்சத்துடனேயே காலத்தை கழித்து வந்தனர். இதையடுத்து மந்திரவாதியை அழைத்து வந்து பூஜை செய்தனர். அந்த மந்திரவாதியும் மந்திர தந்திரங்களை செய்தார். ஒவ்வொரு வீடுகளுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு பூஜைகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் இனி இது போன்ற சம்பவம் நடக்காது என மக்கள் கருதினர். இதனால் நிம்மதியாக இருந்த நிலையில் மீண்டும் சில வீடுகளில் மட்டும் தீவிபத்து ஏற்பட்ட வண்ணம் இருந்தன.
இதையடுத்து கங்கையம்மனுக்கு ஆடு பலியிட்டு பூஜை செய்தால் இது போல் நடக்காது என பூசாரிகள் சொன்னதை கேட்ட அப்பகுதி மக்கள் அதையும் செய்து பார்த்தனர். ஆனாலும் வீடுகள் தீப்பிடித்து எரியும் தொடர் சம்பவம் நிற்கவே இல்லை. இதனால் இனியும் மந்திரவாதியை அழைத்து ஒரு பயனும் இல்லை என கருதிய மக்கள் போலீஸாரை அழைத்தனர். இதையடுத்து போலீஸார் அந்த ஊரில் வெட்டியாக சுற்றி வந்த சிலரை பிடித்து விசாரித்தனர். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை யாரோ செய்கிறார்கள் என்று மட்டும் போலீஸாருக்கு சந்தேகம் இருந்ததாம். இதையடுத்து தீப்பிடித்து எரிந்த வீட்டில் ஒரு 19 வயது பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியிருந்தார்.
இதனால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறினார். அவர் கூறுகையில் தனது தாய்க்கு அந்த ஊரில் உள்ள பல ஆண்களுடன் தொடர்பிருந்தது. இது குறித்து தனது தாயிடம் கண்டித்தார். மேலும் இந்த நடத்தையை மாற்றிக் கொள்ளுமாறு கூறியும் அந்த தாயை கேட்கவில்லையாம். இதனால் ஊரைவிட்டு வேறு எங்காவது சென்று நல்லபடியாக வாழலாம் என்றாராம். இந்த ஊரை விட்டு எங்கும் செல்ல முடியாது என கூறினாராம். இதனால் தனது வீட்டில் உள்ள பீரோவை அந்த பெண் தீவைத்து கொளுத்தினார். இதில் பீரோவில் இருந்த பொருட்கள் எரிந்து ரூ 2500 பணமும் தீயில் கருகியது. எனினும் ஊரை விட்டு வரமாட்டேன் என தாய் சொல்லிவிட்டார்.
இதனால் தனது தாயின் சேலையில் தீவைத்து கொளுத்திவிட்டு உடனே அவரை காப்பாற்றிய மகள் ஏதோ பில்லி சூனியம் ஏவல் என தாயை பயமுறுத்தியுள்ளார் மகள். இதற்கும் அவரது தாய் மசியவில்லை. அதனால் இரவு நேரத்தில் தாயுடன் தகாத உறவில் இருக்கும் ஆண்களின் வீடுகளுக்கு இரவு நேரத்தில் சென்ற மகள் தீவைத்து கொளுத்தியுள்ளார். திடீர் என தீப்பிடித்து எரிந்த கிராமத்தில் தனது தாயை திருத்துவதற்காகவே மகள் இது போன்று விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
The post திருப்பதியில் சந்திரகிரி தொகுதிக்குள்பட்ட கிராமத்தில் தொடர் தீவிபத்து appeared first on Dinakaran.
