டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியே நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பார் என அமித்ஷா அறிவித்துள்ளார். 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடியே கட்டடத்தை திறப்பார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் மோடியின் கனவு. பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளுக்கு எடுத்துக்காட்டு புதிய நாடாளுமன்ற கட்டடம். பிரதமர் மோடியின் கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வைக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம் சிறந்த எடுத்துக்காட்டு.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சோழர்களின் செங்கோல் இடம்பெறக் காரணம் பிரதமர் நரேந்திர மோடி. செங்கோல் வார்த்தையின் பொருள் செல்வம் நிறைந்தது என்பதாகும். சோழர்களின் செங்கோல் பற்றி கேள்விப்பட்டு கூடுதல் விவரங்களை பிரதமர் மோடி கேட்டுப் பெற்றார். செங்கோல் வைப்பதற்கு நாடாளுமன்ற கட்டிடத்தை விட பொருத்தமான புனிதமான இடம் இருக்க முடியாது. 8ம் நூற்றாண்டில் சோழ ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கோல், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கு சான்றாக சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் விளங்கி வருகிறது. நாடு சுதந்திரமடைந்தபோது நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை வழங்கியது.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது சோழர்களின் செங்கோல் பிரதமரிடம் அளிக்கப்படும். தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் டெல்லியில் பிரதமரிடம் செங்கோலை ஒப்படைக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடியே திறந்துவைப்பார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டிய 60,000 தொழிலாளர்களை பிரதமர் பாராட்டி கவுரவிப்பார் என கூறினார். குடியரசுத்தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று அமித்ஷா கூறியுள்ளது அரசியல் கட்சிகளையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
The post “புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடியிடம் அளிக்கப்படும்”: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.