சென்னை: தேர்வுக்கு என்று 16, 17 மணி நேரம் படிக்க தேவையில்லை. நார்மலாக, புரிந்து படித்தோலே போதும் என்று சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாடுஅளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜீஜீ கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் திருவள்ளுவர் தெருவை பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீஷியனாக பணி புரியும் சுரேஷ் என்பவரின் மகள் ஜீஜீ, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 107ம் இடமும், தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு அளவில் முதல் இடத்தை பிடித்த ஜீஜீ கூறியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றது சந்தோஷமாக உள்ளது. அதுவும் முதல் முயற்சியிலேயே தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்து ரொம்ப சந்தோஷமாக உள்ளது. தேர்வுக்கு என்று எதுவும் ஸ்பெஷலாக படிக்கவில்லை. எப்போதும் போல் தான் இருந்தேன். செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கொண்டு தான் இருந்தேன். இதற்காக 16 மணி நேரம், 17 மணி நேரம் என்று படிக்கவில்லை.
நார்மலாக படித்து, புரிந்து படித்தாலே போதும். சிறிய வயதில் இருந்தே செய்தி தாள்களை படிப்பதை தினமும் வழக்கமாக கொண்டிருந்தேன். எனக்கு கதை கட்டுரை எழுதுவதில் ரொம்ப ஆர்வம் உண்டு. சின்ன வயதில் இருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அது எனது கனவாக இருந்தது.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பிகாம் படித்து கொண்டு இருக்கும் போது, தமிழ் கிளப்பில் சேர்ந்து அதில் நிறைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தது. கல்லூரி இறுதி ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி நிறைய தெரிய வந்தது. எனது சிவில் சர்வீஸ் தேர்வு முயற்சிக்கு பேராசிரியர்கள் நிறைய உதவி செய்தனர். கடந்த ஓர் ஆண்டாகத்தான் குடிமைப் பணிகள் தேர்வுக்காக பயின்று வந்தேன். எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் முழு கவனத்துடன் படித்தால் குறுகிய காலத்திலேயே அந்த தேர்வில் வெற்றி பெற முடியும்.
எனது சிறு வயது ஆசை எழுத்தாளராக வேண்டும் என்பதே தற்பொழுது இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் முதலிடம் பிடித்து இருந்தாலும் எனது எழுத்தாளர் ஆகும் கனவு தொடரும். தமிழ் இலக்கியத்தை முக்கிய பாடமாக இந்த தேர்வில் தேர்வு செய்ததும் இந்த தேர்வில் எனக்கு பேரும் உதவியாக இருந்தது. எனது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு, ஊக்கமும் தான் எனது இந்த வெற்றிக்கு காரணம். அதுமட்டுமல்லாமல் எனது தேர்வுக்கு வீட்டில் அப்பா ரொம்ப ஆதரவாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார். ஜீஜீயின் தந்தை சுரேஷ் கூறுகையில், ‘‘எனது மகள் இத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எனது மகள் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. எனது மகள் சிறுவயதில் இருந்து அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பெற்று வந்தார்’’ என்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிகாம் படித்த ஜீஜீ 87%மதிப்பெண் பெற்று கல்லூரியில் இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 16, 17 மணி நேரம் படிக்க தேவையில்லை புரிஞ்சு படிச்சாலே போதும்: சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த எலெக்ட்ரீஷியன் மகள் ஜீஜீ பேட்டி appeared first on Dinakaran.
