×

வாலிபர் மூளைச்சாவு: 5 பேருக்கு மறுவாழ்வு

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (28). கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி திருச்சி சாலை, காங்கேயம்பாளையம் அருகே பைக்கில் சென்ற போது விபத்தில் படுகாயமடைந்தார். மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் பாலமுருகனுக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலமுருகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்தனர். பாலமுருகனின் இருதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய 5 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், ‘‘மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் தானமாக பெறப்பட்ட 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கும், மற்றொன்று சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கல்லீரல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும், இருதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளும் விமானம் மூலம் சென்னைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது’’ என்றார்.

The post வாலிபர் மூளைச்சாவு: 5 பேருக்கு மறுவாழ்வு appeared first on Dinakaran.

Tags : Govai ,Govai Government Medical College Hospital ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...