×

தெற்கு ரயில்வேயில் உள்ள 95 ஸ்டேஷனில் தமிழ்நாட்டிலேயே தயாரித்த உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் விற்பனை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: ‘‘மாநிலம் முழுவதும் 95 ரயில் நிலையங்களில் முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே தயாரித்த உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படும்’’ என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: அந்தந்த மாநில உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில்தெற்கு ரயில்வே செயல்படுத்தியுள்ள திட்டம் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள்.’ இதில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு சந்தை ஏற்படுத்தி எளிய மக்களுக்கு கூடுதல் வருவாய்க்கு வழிவகை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்களை காட்சிப்படுத்த, விற்பனை செய்ய கடைகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டு பொருட்கள் பிரபலமடையும். கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் தற்போது வரை தமிழ்நாட்டில் 95 கடைகளும், புதுச்சேரியில் 2 கடைகளும் செயல்படுகிறது.

இந்த கடைகளில் உள்ளூர் பழங்குடியினரின் கலை பொருட்கள், காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கோவில்பட்டி கடலை மிட்டாய், டீ தூள், மசாலா பொருட்கள் போன்ற உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளை அமைக்க விரும்புவோர் கைவினை கலைஞர் அல்லது கைத்தறி நெசவாளர் ஒன்றிய, மாநில அரசு தரப்பில் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். கடைகள் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர் ரயில் நிலையத்தில் கடைகளை அமைத்து 15 நாட்களுக்கு விற்பனை செய்யலாம். இதற்காக ஒரு சிறிய அளவு கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தெற்கு ரயில்வேயில் உள்ள 95 ஸ்டேஷனில் தமிழ்நாட்டிலேயே தயாரித்த உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் விற்பனை: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,95th Station ,Southern Railway ,Chennai ,95th Station on ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...