×

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்

கடலூர்: என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் ஒன்றியம் வழிசோதனைபாளையத்தில், என்எல்சி நிர்வாகத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.83 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, எம்.புதூரில் காசநோய் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: என்.எல்.சி நிர்வாகம் சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து பல்வேறு திட்ட பணிகள் கடலூர் மாவட்டத்துக்கு செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தற்போது நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.100 கோடி செலவில் மருத்துவமனைகள் மற்றும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் என்.எல்.சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் பாதிப்புகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கான அடிப்படை வாழ்வாதார திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு பணிகள் வழங்க வேண்டும் என கோரி நடந்த தொடர் போராட்டத்தின் காரணமாக தற்போது விடிவு ஏற்பட்டுள்ளது. என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க, எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் போது கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு, அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் பிள்ளைகளுக்கு என்எல்சியில் முழுமையாக வேலை கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* தினகரனில் 27ம் தேதி விரிவான செய்தி
என்எல்சியில் 6,000 நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. இங்கு 50 சதவீதம் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுவதால் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது பற்றி தினகரன் நாளிதழில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி விரிவான கட்டுரை வெளியானது. இந்நிலையில் என்எல்சி நிர்வாகம், நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : NLC ,Minister ,MRK Panneerselvam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில்...