![]()
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் மே 13-ல் தொல்லியல் கண்காட்சி தொடங்கும் என அறிவித்துள்ளனர். வெம்பக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. கண்காட்சியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தொடங்கி வைக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் நுண்கற்கருவிகள், சங்கக்கால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை அடங்கும். இவை கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழைமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணிகளுக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி தமிழகத் தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. வெம்பக்கோட்டையில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 15 குழிகளில் நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.
சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள், காதணிகள், சிறு பானை, சுடு மண்ணாலான தொங்கட்டான், வளையம், தந்தத்தாலான தொங்கட்டான், செவ்வந்திக்கல், கை கோடரி, சூது பவளமணி, அரவைக்கல், தங்க அணிகலன், சுடுமண்ணாலான முத்திரை, ஆண் உருவம்,சுடுமண்ணாலான சங்கக்கால முத்திரை, முழு சங்கு வளையல், இருபுறமும் உருவம் பதித்த செப்பு நாணயம் உள்ளிட்ட 3000வகையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து நடைபெற்று வந்த 2ம் கட்ட அகழ்வராய்ச்சி பணியில் தற்போது வரை சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 300 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்ட தொல்பொருட்களை பொது மக்கள் மற்றும் மாணவர்கள் பார்வைக்காக அருகிலேயே கண்காட்சி அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விஜயகரிசல் குளம் உச்சிமேடு பகுதியின் அருகே தொல்லியல் துறை சார்பில் தொல்பொருட்கள் கண்காட்சி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் மே 13-ம் தேதி தொல்லியல் கண்காட்சி தொடங்கும் என அறிவித்துள்ளனர்.
The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் மே 13-ல் தொல்லியல் கண்காட்சி தொடங்கும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.
