![]()
புதுடெல்லி: கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு என்பது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது, அதுகுறித்து அரசியல் செய்யக் கூடாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை பாஜ அரசு ரத்து செய்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசின் மேற்கண்ட முடிவை மே.9ம் தேதி வரையில் அமல்படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் நாகரத்னா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷாந்த் தவே,‘‘முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத இடஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் அதுசார்ந்த இடஒதுக்கீடு குறித்து பேசி உள்ளனர்.
இவர்களின் பேச்சு நீதித்துறையின் மாண்பை குறைப்பது போன்று உள்ளது’’ என தெரிவித்தார். இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘நீதிமன்ற விசாரணையில் வழக்கு இருக்கும் போது அதுசார்ந்த கருத்தை யார் தெரிவித்திருந்தாலும் அது தவறுதான். இருப்பினும் நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை’’ என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,‘‘ஒரு விவகாரம் நீதித்துறையின் முன்பாக நிலுவையில் இருக்கும் பொழுது அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எப்படி அதன் மீதான கருத்துக்களை பொதுவெளியில், அதுவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூற முடியும்?. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கலக்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை.
மேலும் இதுபோன்ற பகிரங்க அறிக்கைகள் அதிருப்தி அளிக்கிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் நீதிமன்றத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் எந்தவிதமான பணி நியமனங்களும் மேற்கொள்ளப்படாது’’ என்ற மறு உறுதி மொழியை நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஜூலை மாதம் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டில் அரசியல் செய்யக் கூடாது: அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.
