×

சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் விடியவிடிய 9 புஷ்ப பல்லக்குகள் பவனி

வேலூர்: தமிழகத்தில் சித்திரை மாதத்தில் அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. அதேபோல் மதுரையில் சித்திரைத்திருவிழா பிரசித்தி பெற்றது. அதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பவுர்ணமி விழாவும் பிரசித்தி பெற்றது. இதற்கு இணையாக சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூர் புஷ்பப்பல்லக்கு விழா நடத்தப்படுகிறது. வழக்கமாக வேலூரில் 7 புஷ்பப்பல்லக்குகள் பவனி வரும். கடந்த ஆண்டு புதிதாக வேலூர் சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோயில் சார்பில் புஷ்பப்பல்லக்கு பவனியில் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியொட்டி 9 புஷ்பப்பல்லக்குகள் பவனியில் இடம்பெற்றன. அதேநேரத்தில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் இந்த ஆண்டு அக்கோயில் சார்பில் புஷ்பப்பல்லக்கு சித்ரா பவுர்ணமி வலத்தில் இடம்பெறவில்லை.

இதை தவிர்த்து வேலூர் அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர், வெல்ல மண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர், மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி சாலை விஷ்ணு துர்க்கையம்மன், வாணியர் வீதி சுந்தர விநாயகர், வேலூர் நேதாஜி மார்க்கெட் புஷ்ப வியாபாரிகள் சார்பில் வேம்புலியம்மன், புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள், சர்க்கார் மண்டி வீதி வீரஆஞ்சநேயர், ஆரணி சாலை திரவுபதியம்மன், சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் என 9 அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப்பல்லக்குகள் அந்தந்த பகுதிகளில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் மண்டி வீதியை அடைந்தன.

அங்கிருந்து கிருபானந்தவாரியார் சாலை, கமிசரி பஜார், பில்டர்பெட் சாலை, தெற்கு காவல் நிலையம், அண்ணா சாலை வழியாக கோட்டைவெளி மைதானத்தில் அணிவகுத்தன. அங்கு புஷ்பப்பல்லக்குகளில் அருள்பாலித்த உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. மேலும் வாணவேடிக்கைகளும் நடந்தன. இதில் வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வேலூர் நகரில் அருள்பாலிக்கும் அனைத்து முக்கிய கோயில்களின் சுவாமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்தனர். புஷ்பப்பல்லக்கு விழாவையொட்டி வேலூரில் பல இடங்களில் இன்னிசை கச்சேரி, அன்னதானம் நடந்தது.

The post சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் விடியவிடிய 9 புஷ்ப பல்லக்குகள் பவனி appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Pushpa ,Vellore ,Chitra Poornami ,Chitrai ,Tamil Nadu ,Brahmotsavam ,Madurai's ,Chitraitru festival ,Palakku Bhavani ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...