காரைக்கால்: தந்தையின் கனவை நிறைவேற்ற நீட்தேர்வில் வெற்றி பெற்ற 63 வயது மூதாட்டி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். மத்தியபிரதேச மாநிலம் அம்லா பகுதியை சேர்ந்த வினோத் யாதவ் மனைவி சுஜாதா ஜடா (63). இந்திய ராணுவத்தில் 8 ஆண்டு பணிபுரிந்து, அதன் பின்னர் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். தான் சிறுவயதில் இருக்கும் போது தனது தந்தை மாதவிகா ஜூடா, மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என கூறியதை சுஜாதா ஜடாநினைத்து பார்த்து உள்ளார்.
இதையடுத்து, வயதை கூட பொருட்படுத்தாமல் 2 ஆண்டுகளாக முயற்சி செய்து கடந்தாண்டு நீட்தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, காரைக்காலில் உள்ள விநாயகா மிஷன் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முதலாம் ஆண்டு படிக்க இடம் கிடைத்தது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சுஜாதா ஜடா கல்லூரியில் நுழைந்தார். சுஜாதா ஜடாவுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவ பேராசிரியருக்கு 48 வயதாக உள்ள நிலையில் அவரது மாணவிக்கு 63 வயது உள்ள நிலையில் வகுப்பு எடுப்பது சுவாரசியமாக உள்ளதாக கல்லூரி பேராசிரியர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
The post தந்தையின் கனவை நிறைவேற்ற 63 வயதில் எம்பிபிஎஸ் படிக்கும் மூதாட்டி: பாடம் நடத்தும் 48 வயது பேராசிரியர் appeared first on Dinakaran.
