×

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில்லை வவ்வால்களை பாதுகாக்கும் கிராம மக்கள்

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராமம் உள்ளது. இயற்கையில் அழகாக காட்சி தரும் இந்த கிராமப்புற பகுதிகள் வயல்வெளிகள் நிறைந்ததாகும். கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்தில் வயல்வெளிகள் நடுவே ஒரு ஆலமரம் உள்ளது. ஆலமரம் எப்பொழுதும் பறவைகளும், வவ்வால்கள் சத்தங்களுடன் காணப்படும்.

வவ்வால்கள் மற்றும் பறவைகளின் சப்தம் இந்த ஆலமரத்தில் எப்போதும் இருந்து வருகிறது. இந்த ஆலமரத்தில்தான் பாலூட்டி வகையைச் சேர்ந்த பழந்திண்ணி வவ்வால்கள் என்ற ஒரு வகையான வவ்வால்கள் இங்கு காலம் காலமாக வசித்து வருகின்றன. உலகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால் இனங்கள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் காணப்படும் பழந்திண்ணி வவ்வால்கள் ஒரு இன வகையைச் சார்ந்ததாகும். ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்கு மேலாக உள்ளது. இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் உணவுக்காக சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று உணவை சேகரித்து விட்டு விடிவதற்குள் மீண்டும் பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஆலமரத்திற்கு வந்து சேர்ந்துவிடும். இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் விளை நிலங்களில் இடும் எச்சங்கள் உரங்களாக பயன்படுகிறது. இதனால் இப்பகுதியில் முப்போக சாகுபடி செய்யப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இந்த வவ்வால் மூலம் பரவுவதாக தெரிவித்து வந்த நிலையில், வவ்வால்கள் இக்கிராமத்தின் நண்பனாக இருந்து வருகின்றன. அதேநேரத்தில் வவ்வால்கள் தங்கியுள்ள ஆலமரம் அருகே உள்ள கிராம மக்களுக்கு கொரோனா பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. பெரம்பூர் கிராமத்து மக்கள் விவசாயிகளின் நண்பனாக இந்த வவ்வாலைபாதுகாத்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன.

எனவே எங்கள் பகுதி கிராம மக்கள் அனைவரும், அந்த இடத்தை வவ்வாலடி என்று பெயரிட்டு பாதுகாத்து வருகிறோம். வெளி நபர்கள் அதிகமாக அப்பகுதிக்கு வந்தால் வவ்வால்களை வேட்டையாடாமல் தடுக்க எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாதுகாத்து வருகின்றார்கள் . மேலும் எங்கள் கிராமங்களில் வவ்வால்களை பாதுகாப்பதற்காக அவற்றிற்கு எந்த விதமான இடைஞ்சல்களும் இடையூறுகளும் ஏற்படாத வகையில் தீபாவளி அன்று பெரம்பூர் கிராமத்தில் வெடி வெடிப்பதே கிடையாது. கிராம மக்களுடன் சேர்ந்து வவ்வால்களின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் உரிய சிறப்பு காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில்லை வவ்வால்களை பாதுகாக்கும் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Kollidam ,Mayiladuthurai district ,Perambur ,Gunnam panchayat ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...