×

மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 2ல் திருக்கல்யாணம், 3ல் தேரோட்டம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 2ம் தேதி திருக்கல்யாண வைபவம், மே 3ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா நடக்கும் 12 நாட்களும் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்.30ம் தேதியும், மே 1ம் தேதி மீனாட்சி அம்மன் திக்விஜயமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, மே 2ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59க்குள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பிலுள்ள திருமண மண்டபத்தில் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

அன்று இரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். திருக்கல்யாணத்திற்கு மறுநாள் மே 3ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். 4ம் தேதி மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது. மே 5ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கல்யாணத்தில் பங்கேற்க முன்பதிவு: திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in மற்றும் maduraimeenakshi.hrce.in gov.in என்ற முகவரியில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.500 மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் 2 கட்டணச் சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரே நபர் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. ஒரு பதிவிற்கு ஒரு செல்போன் எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே, ஒரு செல்போன் எண்ணில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 2ல் திருக்கல்யாணம், 3ல் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chitrai Festival ,Meenakshiyamman Temple ,Thirukalyanam ,Chariot Parade ,Madurai ,Madurai Meenakshi Amman Temple Chitrai Festival ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...