×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகள் சொந்த நலனுக்காக புதிதாக கொண்டுவரப்பட்டன: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் 2வது நாளாக நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, கட்சியின் திருத்த விதிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்று கட்சியின் சட்ட திட்ட விதிகளில் குறிப்பிடவில்லை. கடந்த 2021 டிசம்பரில் நடந்த செயற்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் எதுவும் 2022 ஜூன் 23 பொதுக்குழுவில் முன்வைக்கப்படவில்லை. மாறாக, புதிய நிர்வாகிகளின் தேர்தல் நியமனத்தை பதிவு செய்து பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் வைக்கப்பட இருந்தன. அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்?.

இதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டது. 75 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கட்சியில் உள்ளனர். இதில் பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நிபந்தனைகள் முன்பிருந்தே பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, தற்போது தான் இந்த நிபந்தனைகள் சொந்த நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. உள்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டது என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

The post அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகள் சொந்த நலனுக்காக புதிதாக கொண்டுவரப்பட்டன: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,general secretary ,OPS ,ICourt ,Chennai ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...