×

தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற தமிழக அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு பொருட்கள்: எம்எல்ஏ வழங்கினார்

திருவொற்றியூர்: தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற தமிழக அணிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார். 67வது தேசிய ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள முர்த்திசப்பூரில் மார்ச் 30 முதல் இம்மாதம் 3ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக வீரர்கள், வீராங்கனைகள் 4 போட்டிகளில் முதல் இடத்தையும், ஒரு போட்டியில் 3ம் இடத்தையும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இவர்களுக்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் திருவொற்றியூர் பூந்தோட்டப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகச் செயலர் எழிலரசன் இதில் தலைமை வகித்தார்.

இதில் திமுக மாநில மீனவரணி துணைத் தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி ரூ.5 லட்சம் மதிப்புள்ள நவீன பரிசுப் பொருட்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி திருவொற்றியூரில் மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி நடத்தப்படும் என்றும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்றும் கே.பி.சங்கர் எம்எல்ஏ தெரிவித்தார். தொடர்ந்து வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத் தலைவர் மதியழகன், நிர்வாகிகள் சுப்பிரமணி, நந்தா, தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற தமிழக அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு பொருட்கள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,National Badminton Tournament ,MLA ,Thiruvottiyur ,KP Shankar ,National Badminton Tournament.… ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...