×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிரடி விசாரணை: 9 மணி நேரம் கிடுக்கிப்பிடி கேள்வி, ஆம் ஆத்மியினர் போராட்டத்தால் பதற்றம், பரபரப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 9 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு அமல்படுத்திய புதிய மதுபானக்கொள்கையில் பெரும் ஊழல் மற்றும் முறைகேடுகள்நடைபெற்றதாக பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார். இதன் தொடர்ச்சியாக, புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்று, பழைய கொள்கையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

எனினும், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் இந்த முறைகேடு பற்றி விசாரிக்க தொடங்கிய சிபிஐ, அப்போது துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிசோடியாவிடம் சுமார் 8 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இறுதியில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தனியாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்தது. மதுபான விற்பனை உரிமையாளர்கள் பலனடையும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டதாகவும், மதுபான விற்பனை உரிமம் பெற பெரும் தொகை கைமாறியது. இதில் கிடைத்த ஊழல் பணம் ரூ.100 கோடியை கோவா சட்டமன்ற தேர்தலின் போது ஆம் ஆத்மி செலவிட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு மூலமாக நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கை பதிவு செய்தது. இதன்தொடர்ச்சியாக, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக, ஞாயிறன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை திடீரென சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று, கெஜ்ரிவால் நேற்று காலை 11.10 மணியளவில் லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்காக உள்ளே செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சிபிஐ அலுவலகம் செல்கிறேன். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன் என்றார். அதன்பின் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவின் முதல் மாடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கெஜ்ரிவாலிடம் அதிகாரிகள் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக துருவி, துருவி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். இரவு 8.15 மணி வரை விசாரணை நடந்தது. 9 மணி நேர விசாரணைக்கு பிறகு சிபிஐ அலுவலகத்தை விட்டு கெஜ்ரிவால் வெளியே வந்தார். முன்னதாக விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, சிபிஐ அலுவலகத்தின் வெளியே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அமைச்சர்கள் கட்சியின் முன்னணி உயர்மட்ட தலைவர்கள் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆரப்பாட்டம் செய்தனர். டெல்லியின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய டெல்லி, பஞ்சாப் மாநில அமைச்சர்கள் எம்பி, எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

  • பாஜ சொல்படி நடக்கும் சிபிஐ
    சிபிஐ அலுவலகம் புறப்படும் முன்பாக ட்விட்டரில் 5 நிமிட வீடியோ ஒன்றை கெஜ்ரிவால் பதிவிட்டிருந்தார். அதில், ‘’சிபிஐ விசாரணையில் ஆஜராகி கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பேன். வருமான வரித்துறை ஆணையராக நான் இருந்துள்ளேன். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ பணம் சம்பாதித்திருக்க முடியும். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் யாரும் நேர்மையானவர் இல்லை. அவர்கள்(பாஜ) அதிகாரம் மிக்கவர்கள். யாரை வேண்டுமானாலும் அவர்களால் சிறையில் அடைக்க முடியும். அந்த நபர் குற்றம் இழைத்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும் என்று பாஜ, சிபிஐக்கு அறிவுறுத்தி இருக்கிறது. பாஜ கூறிவிட்டால் சிபிஐ அதன்படிதான் நடக்கும். நான் எனது நாட்டை, பாரத மாதாவை நேசிக்கிறேன். நாட்டிற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என வீடியோவில் தெரிவித்துள்ளார். முன்னதாக காந்தி நினைவிடத்துக்கு சென்று கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.

  • சிபிஐ கேட்ட 56 கேள்விகள்
    சிபிஐ விசாரணைக்கு பிறகு கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுபானக்கொள்கை வழக்கு முழுவதும் பொய்யானது. இது கேவலமான அரசியலின் விளைவு மட்டுமே. சிபிஐ அதிகாரிகளின் ‘‘விருந்தோம்பலுக்கு” நன்றி. அவர்கள் என்னிடம் நட்பு ரீதியாகவும் இணக்கமாகவும் கேள்விகள் கேட்டார்கள். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். சிபிஐ அதிகாரிகள் சுமார் 56 கேள்விகளைக் கேட்டனர். இவ்வாறு கூறினார்.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிரடி விசாரணை: 9 மணி நேரம் கிடுக்கிப்பிடி கேள்வி, ஆம் ஆத்மியினர் போராட்டத்தால் பதற்றம், பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Aadmi Struggling ,New Delhi ,Delhi ,Chief of ,CPI ,Aadmians ,
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...