×

ஆவினில் பால் கொள்முதல் அதிகரிக்க புதிய திட்டம்

சேலம், பிப். 24: சேலம் ஆவினில் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் கறவை மாடு வாங்க 237விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளது. இதன்படி ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ₹30 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 30 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில் சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது, 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.  2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 4.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 தினமும் உள்ளுர் தேவைக்கு 2.10 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்கு 2 லட்சம் லிட்டர் அனுப்பப்படுகிறது. மீதியுள்ள பாலை பால் பவுடராகவும், நெய், இனிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் சேலம் ஆவின் முதல் இடத்தைபெற்றுள்ளது.ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் உப பொருட்களான நெய், பால் பவுடர், பன்னீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், நறுமண பால் வகைகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லெட்மற்றும் பிஸ்கட் வகைகள் விற்ப்னை செய்து வருகிறது. இதனிடையே சேலம் ஆவினில் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில், பால் வழங்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தினமும் விற்பனை செய்யப்படும் 2.10 லட்சம் லிட்டரை விட கூடுதலாக 40 ஆயிரம் லிட்டர் அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்காக பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆவினில் பால் வழங்கும் விவசாயிகளுக்கு  வட்டியில்லா கறவை மாடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தாலுகா வாரியாக விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மக்களுக்கு தீவன விதைகள் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திலேயே சேலம் ஆவினில் உள்ள விவசாயிகளின் 17000கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதுகுறித்து சேலம் ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: பால் கொள்முதலையும், விற்பனையும் அதிகரிப்பது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பால் கூட்டுறவு சங்கத்திற்கு பாலை விவசாயிகள் வழங்கினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. தரமான பாலுக்கு 365 நாட்களும் நியாயமான விலை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சங்கம் ஈட்டிய லாபத்தில் உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. சங்கத்திற்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு அண்ணா நலன் விபத்து காப்பீட்டு திட்டத்தில் மாதம் ₹1க்கு  ₹2.50லட்சம் கிடைக்கிறது. சங்கத்திற்கு பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையினை 50 சதவீதம் செலுத்துகிறது.

கறவை மாடுகளுக்கு கால்நடை மருத்துவரின் வாராந்திர சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் முகாம் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு கால்நடை பராமரிப்புகடன், கறவை கடன் தலா ₹14 ஆயிரம் வீதம் ₹1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தரமான கால்நடை கலப்பு தீவனம் மானிய விலையில் கிடைக்கும். ஆனால் தனியார் மையத்தில் பெறப்படும் பாலுக்கு இது ஏதுவும் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இதன் மூலம் ஆவினில் கொள்முதல் அதிகரிக்கும். தற்போது பிற்படுத்தப்பட்டோர் துறை முலம் ₹65 லட்சம் வட்டியில்லா கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட உள்ளது. 237 விவசாயிகளுக்கு தலா ₹ 30 ஆயிரம்  கடன் வழங்கப்படுகிறது. இதை பெற்று மாடு வாங்கி கொள்ளலாம். 190 பழங்குடியின, ஆதிதிராவிடர்களுக்கு ₹10 ஆயிரம் மதிப்புள்ள மாட்டு தீவன விதைகள் வழங்கப்படவுள்ளது. சேலம் ஆவினில் தான் 17000 கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக இன்சூரன்ஸ் தொகையும் விவசாயிகளுக்கு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

Tags : Aawan ,
× RELATED ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்...