கடத்தூர், ஆக.5:கடத்தூர் அடுத்த புளியம்பட்டி பசுவேஸ்வரன் திருக்கோயிலில், ஆடி 18 முன்னிட்டு ஆடித்தேர்த்திருவிழா நடந்தது. விழாவில் நேற்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது, விவசாயிகள் தாங்கள் விளைவித்த சிறு தானியங்கள், முத்துக்கொட்டை, மிளகு, உப்பு உள்ளிட்டவற்றை தேர் மீது வீசி வழிபட்டனர். இதனால் நடப்பு ஆண்டில் வயல் வெளிகளில் அதிக மகசூல் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலைஞர்கள் வேடமணிந்து வந்து நிகழ்ச்சியை அறங்கேற்றினர். தாரை தப்பட்டை முழுங்க முக்கிய வீதிகளில் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. மக்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.