×

மாவட்டம் முழுவதும் 1202 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாமக்கல், பிப்.26: நாமக்கல் மாவட்டத்தில் நாளை(27ம் தேதி) 1202 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை(27ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், நாமக்கல் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 1.5 லட்சம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அது போலவே தற்பொழுது நடைபெறும் முகாமில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1052 முகாம்களும், நகராட்சி பகுதியில் 150 முகாம்களும் என மொத்தம் 1202 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4927 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும், மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 52 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில், 22 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 126 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முகாம்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக  இடைவெளியினை கடைபிடிதல், சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டும் அனுமதித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Polio Drip Drug Camp ,
× RELATED போலியோ சொட்டு மருந்து முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு