×

ஈரோடு, மதுரை, நெல்லையில் தனியார் மயத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 

சென்னை: ஈரோடு, மதுரை, நெல்லையில் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என வலியுறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் தூய்மை பணிக்கு குடியிருப்பாளர்களிடம் தனி தொகையை வசூலித்துக் கொண்டு தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதற்கு தூய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 1200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தினக்கூலியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி மைய அலுவலகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மதுரை
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (2D)ன் படி ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் குடிநீர், கழிவறை மற்றும் ஓய்வறை வசதி செய்து கொடுக்க வேண்டும். பகல் 12.30 மணிக்கு மேல் பயோ-மெட்ரிக் முறையை கைவிட வேண்டும். தனியார் ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு குறைத்து வழங்கிய 4 மாத நிலுவை ஊதியத்தை மாநகராட்சி நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும். தூய்மைப்பணிகளில் தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும். முந்தைய அரசு கொண்டு வந்த அரசாணை 152 மற்றும் 139ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சிஐடியு மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.

நெல்லை
தவெக அரசின் தனியார் மய முடிவை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று காலை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு விடக் கூடாது என கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சியில் 1700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனம் மிகவும் கொத்தடிமையாக நடத்தி வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு குறிப்பாக இஎஸ்ஐ, பி.எப்., காப்பீடு மற்றும் சரியான மாத ஊதியம், வார விடுமுறை உள்ளிட்ட எதுவும் வழங்கப்படுவதில்லை. தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை. எனவே தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிரான செயலாக இவை இருப்பதால் இவற்றை தடுத்திடும் வகையில் தூய்மை பணியாளர்களை அரசு பணியாளர்களாக நிரந்தரபடுத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது: தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் வழங்க மாநக​ராட்சி நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இதனால் ஏற்​கனவே பணி செய்து வருவோருக்கு பணிவாய்ப்பு கிடைக்​காது. இத்​தனை ஆண்​டு​களாக மாநக​ராட்சி தூய்​மைப்பணி மேற்​கொண்ட தங்​களுக்கு பணி நிரந்தர வாய்ப்பு பறி​போகும். தனி​யார் பணியை மேற்​கொண்​டால், வேலை​வாய்ப்​பில் இடஒதுக்​கீடு குழிதோண்டி புதைக்​கப்​படும்.
தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பணிப் பாது​காப்​பு, ஓய்​வூ​தி​யப் பலன்​கள் கிடைக்​காது. எனவே, தூய்மை பணியை தனியாருக்கு விடும் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு நிரந்த தீர்வை காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags : Erode ,Madurai ,Nellai ,Chennai ,Tamil Nadu ,Tambaram ,Avadi ,Hosur ,Vellore ,Coimbatore ,Salem ,
× RELATED தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று...