×

மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம் விவகாரம்; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே தவெக ஆதரவு: அதிமுக வெளிநடப்பு

 

சென்னை: மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம் விவகாரத்தில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் பேச அனுமதிக்கவில்லை என்று அதிமுகவும் வெளிநடப்பு செய்தது. ஆனால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே தவெக ஆதரவு தெரிவித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் சட்டசபையில் மேகதாது அணை குறித்து கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வந்த திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் எழுந்து நின்று நீண்ட நேரம் அனுமதி கேட்டு கொண்டே இருந்தனர். ஆனால், அவர்களுக்கு சபாநாயகர் வாய்ப்பு அளிக்கவில்லை. அப்போது, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தளி ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர், ”நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். எங்களுக்கு பேச அனுமதி மறுக்கிறீர்கள்” என்று கூறினார். இதனால், அவையில் பரபரப்பு எழுந்தது.

ஆனாலும் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து மேகதாது அணை தொடர்பாக சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நீண்ட விளக்கம் அளித்தனர்.
அப்போதும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எழுந்து குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் உத்தரவின் பேரில், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாய்ப்பு வழங்கினார். அப்போது தளி ராமச்சந்திரன் பேசும் போது, இந்த அவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் போது திருத்தங்கள் கொண்டு வந்தால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே கொடுக்க வேண்டும். அது தான் விதி. ஆனால், புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்தது எங்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை. அதனால், தான் அன்றைய தினம் தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். புதிய நடுவர் மன்றம் என்ற திருத்தத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. எனவே இந்த தீர்மானத்தை எடுத்து பழைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நான் இறுதியாக சொல்கிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தான் நடுவர் மன்றம் என்ற திருத்தத்தை எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றினோம். இந்த தீர்மானம் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கும், இந்த புதிய தீர்மானத்திற்கும் சம்பந்தம் இல்லை. கர்நாடக அரசு இப்போது, பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக புதிய ஒரு பிரச்னையை எழுப்பினர். அதை தடுக்க தான் இந்த தீர்மானம். இந்த அரசு தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கும். எக்காரணம் கொண்டும் தமிழக மக்களின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்” என்றார். அதன் பின்னரே கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அமைதியாகினர். தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: தமிழக சட்டப்பேரவை விதி 220ன் கீழ் அதிமுக சார்பாக உரிமை மீறல் பிரச்சனையை அவைக்கு கொண்டு வர அனுமதி கேட்டோம். எங்களின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் அறையில் கடிதம் அளித்தார். அரசின் தனித் தீர்மானத்தில் திருத்தம் செய்ததை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், இந்த உரிமைப் பிரச்சனையை அவையில் எழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் கொடுத்திருந்தோம். பேரவைத் தலைவர் ஜீரோ அவரில் இதை எடுக்க மறுத்துவிட்டார். எங்களைப் பேச அனுமதிக்கவில்லை. அதனால், நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினைப் பற்றிப் பேச அனுமதி கேட்டோம்; ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். கடந்த 19ம் தேதி மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித் தீர்மானம் முதல்வரால் முன்மொழியப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையை கூறப்பட்டுள்ளது.

பேரவை விதியின் படி தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அரசின் திருத்தங்கள் முறையாக அவைக்குத் தெரிவிக்கப்பட்டு, திருத்தப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிய வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறுதான் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது முதல்வர் அனுமதி பெறாமலும் திருத்தம் தொடர்பாக பேரவைக்கு அறிவிக்காமலும் திருத்தம் செய்தது அவை விதிகளுக்கும் முரணானது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் அரசினர் தனி தீர்மானத்தில் திருத்தம் தெரிவித்து அரசுக்குக் கூறியுள்ளதாகத் தனது உரையில் கூறினார். அதனை ஏற்றுக்கொண்டு அரசினர் தனித் தீர்மானத்தில் இணைத்துக் கொள்வதாக முதலமைச்சர் பதிலுரையில் கூறியுள்ளார். பேரவை விதி 36/5 கீழ் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அது தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் முதல்வருக்கு மட்டும் அது தொடர்பான தகவல் முன்பே தெரிவிக்கப்பட்டு, பதிலை முதல்வர் வாசித்தார். அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதற்கு முன்பு முதல்வர் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டது அவையின் விதியை மீறிய செயல்.

திருத்தம் முறையாக அவையில் முன்மொழிபட்டு, வழிமொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு திருத்தம் பேரவையால் ஏற்கப்படும் நிகழ்வில் மட்டுமே வரைவுத் தீர்மானத்தில் சேர்க்க இயலும். பேரவைக்கு அளிக்க வேண்டிய தகவல்களை அளிக்காமல், ஒருதலைப் பட்சமாக பேரவைத் தலைவர் நடந்து கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது. வருங்காலத்தில் இது போன்ற விதிமுறைகள் நடைபெறாமல் இருப்பதை பேரவைத் தலைவர் உறுதி செய்ய வலியுறுத்துகிறேன். திருத்தம் செய்யப்படாத வரவுத் தீர்மானத்தை மட்டுமே அதிமுக ஆதரித்தோம். ஆனால், சட்டமன்றத்தில் முன்மொழியப்படாத, திருத்திய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதைத்தான் சட்டப் பேரவையில் உரிமை மீறல் பிரச்சனையாகக் கொண்டு வந்தேன். விதிகளுக்குப் புறம்பாக திருத்தத்தை முதல்வரின் பதில் உரையில் தெரிவித்துள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இதைப் பற்றிப் பேசுவதற்காக தான் நாங்கள் உரிமை மீறல் மனு அளித்தோம். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

காவிரி நதி தமிழகத்தின் ஜீவநதி. இதை நம்பித்தான் தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளார்கள். 20 மாவட்ட மக்கள் காவிரியால் குடிநீர் பெறுகிறார்கள். காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் நிலையான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மீண்டும் நடுவர் மன்றம் வேண்டும் என்பது எந்த நோக்கத்துக்காக கேட்கப்படுகிறது. கீழ்ப்படுகை மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலம் காவிரி நீரைத் தேக்கவும் தடுக்கவும் கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில், இந்த இடைச்செருகள் செய்து தீர்மானத்தை கொண்டு வந்தது என்பதற்கான விளக்கத்தைப் பெறுவதற்காகத்தான் இந்த உரிமை மீறல் கடிதத்தைக் கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Mekedadu ,AIADMK ,Thaveka ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED ஈரோடு, மதுரை, நெல்லையில் தனியார்...