×

இனிவரும் காலங்களில் விபத்துகளை தடுக்க ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

 

சென்னை:‘‘இனிவரும் காலங்களில் விபத்துகளை தடுக்க, ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்’’ என சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அமைச்சர் முகமது பர்வேஸ் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அமைச்சர் முகமது பர்வேஸ் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில், ice flakes generator machine-க்கு செல்லும் பைப்லைன் வால்வில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றும் அந்த வளாகத்தில் தங்கியிருந்த 74 நபர்கள் (70 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 நபர்கள் அரசு மருத்துமனையிலும், 27 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 27 நபர்கள் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டறிந்து முதலமைச்சர் மிகவும் வேதனையடைந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, நல்லடக்கம் செய்வதற்கான செலவினை அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்து மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்கள் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம் (ESI), வருங்கால வைப்பு நிதியை (PF) உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். விபத்து குறித்து இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, இயக்குநர், பொது சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் – செயலர் ஆகியோர் குழு அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும் முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இனிவரும் காலங்களில், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஆபத்தான தொழிற்சாலைகளை (Hazardous Industries) உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Tags : Assembly ,Chennai ,Minister ,Mohammad Parvez ,Tamil Nadu Legislative Assembly ,Tiruvallur ,
× RELATED ஈரோடு, மதுரை, நெல்லையில் தனியார்...