சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ மற்றும் 4.5 கிமீ உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
23ம் தேதி(நாளை) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை, இதர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
