×

தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி தலைமையின் முடிவை கண்டித்து முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா: சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி

 

சென்னை: சந்தர்ப்பவாதத்திற்காக தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருவது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் தான், ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், தவெக அழைப்பு விடுத்த அடுத்த செகன்ட் ஓடிச் சென்று விஜய்க்கு ஆதரவு வழங்கிய செயலை தமிழக மக்களே கிண்டல் செய்யும் நிலையில், காங்கிரசார் பலர் கட்சி தலைமைக்கு கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இருக்கும் நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவை தேர்தல் வரை தவெகவுடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு, கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கட்சித் தலைமையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சந்தர்ப்பவாதத்திற்காக தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் நிர்வாகி பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தவெக கூட்டணியில் இணைந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளின் விலகல் அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன்” என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை, பாஜவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது” என தெரிவித்துள்ளார். மேலும் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ள முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முக்கியப் பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தங்களது விலகல் கடிதங்களில், ‘திமுகவுடனான நீண்டகால உறவை முறித்துக்கொண்டு தவெகவுடன் கைகோர்த்தது ‘‘அரசியல் துரோகம்” மற்றும் ‘‘சந்தர்ப்பவாதம்” என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : Congress ,Thaveka ,Chennai ,All India Congress ,Tamil Nadu ,
× RELATED 15 ஆண்டுகளாக பயோ காஸ் மூலம் சமையல் செய்யும் பெண் கவுன்சிலர்