×

கடல் வழியை அமெரிக்கா முடக்கியதால் ஈரானுக்கு தினமும் ரூ.4,117 கோடி இழப்பு: உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

வாஷிங்டன்: ஈரான் நாடு நிலைகுலைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, கடந்த 8ம் தேதி முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்தது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஈரானின் அனைத்து துறைமுகங்கள் மீதும் அமெரிக்கா கடுமையான கடல்வழி தடையை விதித்தது.

இதற்காக அப்பகுதியில் மூன்று விமானம் தாங்கி கப்பல் குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது. இதுவரை ஈரான் துறைமுகங்களுக்கு செல்ல முயன்ற 23க்கும் மேற்பட்ட கப்பல்கள் அமெரிக்க கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி சரிந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் விரைவில் பெட்ரோல் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என்று அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் எச்சரித்துள்ளார். இந்த கடல்வழி தடையால் ஈரான் பொருளாதாரத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 435 மில்லியன் டாலர் (ரூ. 4,117 கோடி) இழப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் நாடு சிதையும் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகளே என்னிடம் தெரிவித்தனர். அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி தடையை நீக்கவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் அவர்கள் அவசரமாக கோரிக்கை விடுத்துள்ளனர்’ என்று கூறியுள்ளார். துறைமுக தடையை அமெரிக்கா நீக்கினால், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதாக ஈரான் முன்மொழிந்துள்ளது. ஆனால் அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்களை தள்ளிவைக்கும் ஈரானின் இந்த கோரிக்கையை டிரம்ப் நிர்வாகம் நிராகரித்துவிட்டது. அணு ஆயுத தயாரிப்பிற்கு நிரந்தர தடை விதித்தால் மட்டுமே தடையை நீக்க முடியும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்த இழுபறியால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 112 டாலராக அதிகரித்துள்ளது.

Tags : Iran ,US ,Washington ,President ,Trump ,Middle East ,United States ,
× RELATED கடல் வழியை அமெரிக்கா முடக்கியதால்...