×

ஆளும் திரிணாமுல் – பாஜக கட்சிகளுக்கு இடையே வாழ்வா… சாவா தேர்தல்; மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. கடந்த 23ம் தேதி 152 தொகுதிக்கு நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவின் போது, முன் எப்போதும் இல்லாத வகையில் 91.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 142 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இன்று நடந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி மற்றும் எதிர்கட்சி தலைவரான மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் போன்ற முக்கிய தொகுதிகளில் பலத்த போட்டி நிலவுகிறது. கொல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் இந்தியாவுக்கான வங்கதேச தூதர் தினேஷ் திரிவேதி தனது வாக்கைப் பதிவு செய்தார். இதற்கிடையே, நாடியா மாவட்டம் சாப்ராவில் பாஜக முகவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல் பனிஹாட்டி தொகுதி பாஜக வேட்பாளரும், ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் தாயாருமான ரத்னா தேப்நாத், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவதில் பிரச்னை உள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த இறுதிக்கட்ட தேர்தலில் மொத்தம் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 220 பெண்கள் உட்பட 1,448 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசு சார்பில் சுமார் 2,500 கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் 41,001 வாக்குச் சாவடிகளிலும் வெப்காஸ்டிங் வசதி செய்துள்ளது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக அனைத்து சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மின்னணு இயந்திரங்களின் செயல்பாடு உறுதி செய்யப்பட்டது. கொல்கத்தா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க ஒன்றிய ஆயுத போலீஸ் படையினர் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக கொல்கத்தாவில் மட்டும் 273 கம்பெனி படையினர் குவிக்கப்பட்டனர். முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. வன்முறையைத் தடுக்க 6,000 விரைவு அதிரடிப்படையினர் தயார் நிலையில் இருந்தனர்.

இந்த தேர்தலின் முடிவுகள் வரும் மே 4ம் தேதி தமிழ்நாடு, கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுடன் சேர்த்து வெளியாக உள்ளது. மேற்கண்ட 5 மாநிலங்களில் எந்தெந்த கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் அல்லது ஆட்சியை பறிகொடுக்கும் என்பது தெரியவரும் என்பதால் நாடு முழுவதும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : TRINAMUL ,BJP ,SAWA ,WEST BENGAL ,Kolkata ,West Bengal Assembly election ,Mamata ,
× RELATED செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க...