சென்னை: கடந்தாண்டு பீகாரில் மட்டும் 24 மணி நேரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு வெளியான நிலையில் தமிழகத்தில் இதுவரை இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடாதது ஏன் என அரசியல் கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையத்தை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தரவுகளில் குளறுபடி இருந்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என அறைக்கூவல் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது. 4 முனைப்போட்டி நிலவிய இந்தத்தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அன்றைய தினத்தின் இறுதியில் வாக்குப்பதிவு 85.15 சதவீதமாக இருந்தது. 2 நாட்களுக்கு பிறகு, மறுசரிபார்ப்பிற்கு பின் இந்த தற்காலிக சதவீதத்தை 85.10 சதவீதமாக (0.05% குறைவு) ஆணையம் திருத்தியது. அதே சமயம், பாலின வாரியான விவரங்களையோ (ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்) அல்லது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையையோ அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
பல ஆண்டுகளாக தேர்தல்களைச் சந்தித்து வரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு முக்கிய திராவிடக் கட்சிகளும், வாக்குச்சாவடி மற்றும் தொகுதி வாரியாக தங்களின் வெற்றி வாய்ப்புகளை கணிக்க படிவம் 17C-ஐ பெற்றுள்ளன. ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சி, புதிய கட்சிகளான விஜய்யின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட புதிய கட்சிகள், திராவிடக் கட்சிகளின் இந்த அனுபவத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தபால் மற்றும் சேவை வாக்குகள் இல்லாத இறுதி அறிக்கைகளுக்காக இன்னும் காத்திருக்கின்றனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றுதான் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி காலை 8 மணி வரை நாங்கள் தபால் வாக்குகளைச் சேகரிப்போம். எனவே, அதுவரை முழுமையான அறிக்கையை வழங்க முடியாது. எங்கள் இணையதளத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை புதுப்பித்துள்ளோம். 6 லட்சம் தபால் வாக்குகள் உள்ளதால், ஏதேனும் மாற்றம் இருந்தால் அது வெறும் 1 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாகவே இருக்கும் என்றார்.
2025 நவம்பரில் பீகாரில் வாக்குப்பதிவு நாளன்றே பாலின வாரியான விவரங்கள் உட்பட அனைத்துத் தரவுகளையும் எப்படி வெளியிட முடிந்தது என்று கேட்டபோது அந்த அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. 2 முறையுமே, வாக்குப்பதிவு நாளன்று இரவு 11 மணிக்குள் ஈவிஎம் வாக்கு எண்ணிக்கையை ஆணையம் வெளியிட்டது.
இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:
‘சட்டமன்ற தேர்தலுக்கான முழுமையான தரவுகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். ஆனால், துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த எண்களை மறுசரிபார்ப்பு செய்வதாகக் கூறி அவர்கள் எங்களைத் தவிர்த்து வருகின்றனர். தரவுகளில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் நீதிமன்றத்தை அணுகுவோம்’
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், அதிமுக மூத்த நிர்வாகியும், எம்.பியுமான இன்பதுரை தெரிவித்ததாவது:
‘‘கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள் அந்தந்தப் பகுதிகளில் தரவுகளை சேகரித்துள்ள போதிலும், முழுமையான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார்.
