சென்னை: தமிழகத்தில் மே 4ம் தேதி வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க 234 தொகுதிக்கும் வெளிமாநில பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்குமான பொதுத்தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சுயேட்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாக மிகவும் ஆர்வமுடன் ஆற்றினர். குறிப்பாக, 18 வயது முதல் 19 வயதுடைய சுமார் 15 லட்சம் இளைஞர்கள் தங்களது முதல் தேர்தலை சந்தித்ததால் காலையிலேயே வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினர். வாக்குப்பதிவு முடிவில் தமிழகத்தில் 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு முடிந்ததும், மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது 75,064 வாக்குப்பதிவு இயந்திரங்களும் துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் என 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முகவர்கள் சிசிடிவி மூலம் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தினசரி சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மே 4ம் தேதி (திங்கள்) காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும். இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 4ம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 62 வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜை போடப்பட்டுள்ளது. பெரிய தொகுதியாக இருந்தால் 20 முதல் 28 மேஜைகள் போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதும், முதல் சுற்று முடிவு காலை 9 மணி முதல் தெரியவரும். முன்னதாக, வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வாக்குகள் எண்ணப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேஜைகள் போடுவது, சிசிடிவி கேமரா பொருத்துவது, சவுக்கு கட்டை அடித்து தடுப்புகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை கண்காணிக்க வெளிமாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என வெளிமாநிலங்களை சேர்ந்த 234 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும் மே 2ம் தேதிக்கு முன்னதாக தமிழகத்தில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு வந்து, வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளை பார்வையிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கிய பிறகு, ஒவ்வொரு சுற்று முடிவுகளும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் கையெழுத்திட்ட பிறகே அதிகாரப்பூர்வமாக வெளியிட முடியும். மேலும், வாக்குப்பதிவின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, தேர்தல் அலுவலர் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வெளிமாநில தேர்தல் பார்வையாளர் தான் அவ்வப்போது உத்தரவு பிறப்பிப்பார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, இறுதி முடிவு அறிவிக்கும்போதும் அவரது கையெழுத்து பெற்ற பிறகே அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
