×

திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பு; பெரம்பூர் தொகுதியில் திண்ணை பிரசாரம்: கலக்கும் திமுக ஐடி விங், இளைஞர் அணி நிர்வாகிகள்

சென்னை: தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும். இம்முறை புதுவரவாக நடிகர் விஜய்யின் தவெக கட்சியும் களத்தில் இறங்கி உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி கட்சி சார்பில் பாமகவைச் சேர்ந்த திலகபாமா, தவெக சார்பில் நடிகர் விஜய் போட்டியிடுகின்றனர். இதனால் பெரம்பூரில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுகவின் ஆர்.டி.சேகரை பொறுத்தவரை மாமன்ற உறுப்பினராக இருந்து அதன் பிறகு அதிமுக ஆட்சியில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். அதேபோல, கடந்த முறை சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இவரது வீடு பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் பகுதியில் உள்ளது. தொகுதிக்கு நன்கு பரீட்சயமானவர். எளிதில் அணுககூடிய நபர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆர்.டி.சேகருக்கு பக்க பலமாக உள்ளன. அதேநேரத்தில், பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமா சிவகாசியைச் சேர்ந்தவர். நடிகர் விஜய் பனையூர் பகுதியைச் சேர்ந்தவர். இவையெல்லாம் ஆர்.டி.சேகருக்கு கூடுதல் பலமாக உள்ளது.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தினமும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் திமுகவின் ஐடி விங் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் இவர்கள் தனியாக 3 முதல் 5 பேர் கொண்ட குழுவாக வீதி வீதியாக சென்று திமுக அரசின் சாதனைகளை கூறி உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் பகுதியில் திமுக அரசு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் எந்த திட்டங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எந்த திட்டங்கள் பற்றி அவர்கள் தெரியாமல் இருக்கின்றனர் என்ற அனைத்து விவரங்களையும் அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஐ.டி. விங் மாநில துணைச் செயலாளர் பத்மபிரியா, மாநில துணைச் செயலாளர் நவீன், இளைஞர் அணியை சேர்ந்த ஜோயல் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கோவையைச் சேர்ந்த தவெக கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த வைஷ்ணவி மற்றும் திவ்யா சத்யராஜ் உள்ளிட்டோர் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தனித்தனியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், விடியல் பயணம், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம், இனி 2000 ரூபாய் உயர்த்தி வழங்குபடுவது குறித்து விவரித்தனர். மேலும், பல்வேறு திட்டங்களின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படுவது, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் என்பது குறித்தும் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ஆக உயர்த்தப்படுவது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் இனி 1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவது. முதியோர் உதவித்தொகை 1200 லிருந்து 2000 ஆகவும், மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை 1500 லிருந்து 2500 ஆகவும் உயர்த்தப்படுவது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்தவித பிணையும் இன்றி 5 லட்ச ரூபாய் வரை மானியத்துடன் கடனுதவி, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள், உயர்கல்வி முடித்த ஐந்து லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாதம் 1500 உதவித்தொகை மற்றும் ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படுவது குறித்தும் விவரித்தனர். மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறுவது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திமுக அரசு தற்போது அறிவித்துள்ள ரூ.8000 கூப்பபனை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பொதுமக்களிடம் ஐடி விங் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் விளக்கமளித்தனர். கும்பலாக வந்தோம், ஓட்டு கேட்டோம், சென்றோம் என்று இல்லாமல் இவர்கள் பொதுமக்களிடம் கலந்துரையாடி மேற்கண்ட திட்டங்களை பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்கின்றனர். பொதுமக்களை அதிக அளவில் பேச வைத்து அதன் பிறகு இவர்கள் திட்டங்கள் குறித்து கூறுவதால் பொதுமக்கள் இந்த பிரசார யுத்திக்கு நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இவர்கள் செய்யும் பிரசாரங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் ஐடி விங் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Tags : DIMUKA ,PERAMBUR ,Chennai ,Tamil Nadu ,Adimuka ,Vijay ,
× RELATED சென்னை மாவட்டத்துக்கான திமுக தேர்தல்...