×

அதிமுக முகமூடி அணிந்து இங்கு ஆள முடியாது; தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது: ராகுல்காந்தி திட்டவட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று மாலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், திமுக வேட்பாளர்கள் கே.என்.நேரு, கதிரவன், கருணை ராஜா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லெனின் பிரசாத் உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது: இந்த தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் அல்ல. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் அடிப்படையில் ஒரு வித்தியாசமான தேர்தல் ஆகும். ​

இந்த தேர்தலில் ஒரு பக்கத்தில் நமது கூட்டணி இருக்கிறது. மறுபக்கத்தில் பாஜவும் அதனுடன் இணைந்த அதிமுகவும் இருக்கின்றன. பாஜ அரசு, மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அதிமுகவில் தங்களுக்கு சாதகமான ஒரு பொம்மையை அந்த இடத்தில் அமர்த்த விரும்புகிறது. அதிமுக என்பது தமிழகத்தின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்சி, தமிழகத்தில் அது ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளது.

ஆனால், இன்றைய அதிமுக, பழைய அதிமுகவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் இன்றைய அதிமுக என்பது வெறும் பாஜவிற்கான ஒரு முகமூடியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த வழியாக பாஜவும், ஆர்.எஸ்.எஸ்சும் தமிழகத்திற்குள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஏன் தமிழகத்திற்குள் ஊடுருவ நினைக்கிறார்கள்?, ஏனெனில் அவர்களுக்கு உங்கள் பண்பாடு, உங்கள் பாரம்பரியம் மற்றும் உங்கள் மொழி ஆகியவற்றை சிதைப்பதற்காக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் என்பது ஒரு சாதாரண மொழி அல்ல, தமிழ் என்பது தமிழ்நாட்டு மக்களின் ஆன்மா. தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் கவுரவத்தையும், தமிழ் மக்களின் வீர உணர்ச்சியையும் இழிவுபடுத்தும் விதமாக அவர்கள் அதிமுகவின் ஆன்மாவை கைப்பற்றி விட்டார்கள். அதிமுகவின் அமைச்சர்கள் தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பாஜவுடன் சரணடைந்து நிற்கிறார்கள். அவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளால் ஈடி, சிபிஐ, ஐடி ஆகியவற்றின் மூலம் மிரட்டப்பட்டு, பணிய வைக்கப்படுகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஒரு போதும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்பது பாஜவிற்கு நன்றாக தெரியும். முக்கியமாக, தனது கொள்கைகளில் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பதும் பாஜவிற்கு தெரியும். அவரது தலைமையில் தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது.

எதற்காக இதை முயற்சிக்கிறார்கள் என்றால், தென் இந்திய மாநிலங்கள், சிறு மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களின் ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காகவும், அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க கூடாது என்பதற்காக இதை செய்தார்கள். நானும், நம்முடைய கூட்டணி கட்சியினரும் இணைந்து அந்த மசோதாவை தோற்கடித்தோம். இப்போது வரைக்கும் அவர்களால் இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற முடியவில்லை.

​சகோதர சகோதரிகளே, பாஜ நினைப்பது மக்களை பிரித்து ஆளுவது மட்டும் தான். பாஜவினர் மதங்களால் மக்களை பிரிக்கிறார்கள், சாதிகளால் பிரிக்கிறார்கள், மொழிகளால் பிரிக்கிறார்கள், குறிப்பாக தேசத்தை துண்டாட நினைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்களை பிரித்து வைக்க பார்க்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஸ்திரத்தன்மையை குறைக்க பார்க்கிறார்கள். பாஜ இரண்டு அல்லது மூன்று பெரிய நிறுவனங்கள் மூலமாக இந்தியாவின் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் அமைப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், எவ்வாறு சமூக நீதி காக்கப்படுகிறது என்பதை. தமிழ் கலாசாரம், தமிழ் வரலாறு மற்றும் தமிழ் மொழியை தாக்க அவர்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எனக்கும், தமிழ்நாட்டிற்கு இடையேயோன உறவு ஒரு அரசியல் ரீதியான உறவு அல்ல. இது பரஸ்பர மரியாதை, அன்பு மற்றும் பாசத்தினால் ஆன உறவு. தமிழ்நாட்டின் மக்களின் உரிமையை காப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசுகையில், ‘‘எல்லோரையும் கட்டுப்படுத்தும் பிரதமர் மோடியால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்காகத்தான் அவர் அதிமுகவை தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்த விரும்புகிறார். ​

ஸ்டாலின் சுதந்திரமானவர், நரேந்திர மோடியால் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் அவருக்குத் தெரியும். அதனால் தான் அவர் ஸ்டாலினை நீக்கிவிட்டு, தான் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவரை அங்கே அமர்த்த விரும்புகிறார். ​மோடி என்ன வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் உண்மை அவருக்குத் தெரிய வரும். ​திமுக- காங்கிரஸ் கூட்டணி தமிழக தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

தமிழக மக்களின் வலிமையையும் விருப்பத்தையும் மோடியும், அமித்ஷாவும் அப்போது புரிந்து கொள்வார்கள்’’ என்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, விமானம் மூலம் நேற்று மாலை 6 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை குளைச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ராகுல் காந்தி பேசுகிறார்.

* நான் உங்கள் சேவகன்
‘‘தமிழர்களுடன் விசேஷமான உறவு எனக்கு உள்ளது. தமிழக மக்களை நான் நேசிக்கிறேன். நல்லுறவு கொண்டுள்ளேன். தலைமுறை தலைமுறையாக தமிழக மக்களை நேசித்து வருவதால் மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். டெல்லியில் உங்களுக்கான சேவகன், பாதுகாவலன் நான். தமிழகத்திற்கு தேவையான பாதுகாப்பை டெல்லியில் உறுதிபடுத்துவேன்’’ என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

* ஹெலிகாப்டரில் சோதனை
சோளிங்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் வந்தார். அவர்வந்து இறங்கியதும் தயாராக இருந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ெஹலிகாப்டரில் சோதனை செய்தனர். இதேபோல் திருச்சியிலும் ராகுல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இரு இடங்களிலும் எதுவும் சிக்கவில்லை.

* அமெரிக்காவுக்கு நாட்டை விற்றுவிட்டார்
‘‘பிரதமர் மோடியின் முகத்தைப் ​நேற்று பார்த்திருப்பீர்கள். அவரிடம் துளியும் தன்னம்பிக்கை இல்லை. ​அவரால் எதிர்க்கட்சியை நேருக்கு நேர் சந்திக்கக்கூட முடியவில்லை. அவர் ஒரு பக்கமாக சாய்ந்து அமர்ந்திருந்தார். சகோதர சகோதரிகளே, இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படுகிறார். ​அவர் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நமது நாட்டையே விற்றுவிட்டார்.

அவர் நமது எரிசக்தி பாதுகாப்பைவிட்டு கொடுத்துவிட்டார். நமது விவசாயிகளை விற்றுவிட்டார். ​நமது சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை விற்றுவிட்டார். இன்று டொனால்ட் டிரம்ப் மோடியை குதிக்கச் சொன்னால், மோடி குதிக்கிறார். டொனால்ட் டிரம்ப் மோடியை படுக்கச் சொன்னால், மோடி படுக்கிறார். ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் நரேந்திர மோடியை முழுமையாக கட்டுப்படுத்துகிறார்.

எப்ஸ்டீன் கோப்புகள் மூலம் அமெரிக்கா பிரதமரை கட்டுப்படுத்துகிறது. பிரதமர் மற்றும் அதானி இடையேயான நிதி உறவை அமெரிக்கா முழுமையாக புரிந்து கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை அமெரிக்காவிடம் அடிபணியுமாறு டிரம்ப் செய்கிறார். இதையேதான் பாஜவும் செய்ய விரும்புகிறது’’ என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

Tags : AIADMK ,Modi ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Rahul Gandhi ,Secular Progressive Alliance ,Thuraiyur, Trichy district ,DMK ,K.N. Nehru ,Kathiravan ,Karunai Raja ,Congress ,Lenin Prasad ,Congress… ,
× RELATED சட்டம், ஒழுங்கு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: முத்தரசன் காட்டம்