×

ஏசி வேனில் அமர்ந்து கைகாட்டுபவர்கள் நமக்கு தேவையில்லை; பாஜவின் ஊதுகுழலான விஜய்யை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்: திமுக கூட்டணிக்கு ஆதரவு: கிறிஸ்தவ நல அமைப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கிறிஸ்தவ நல அமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி எம்எல்ஏ, மேயர் (பொ) குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில தலைவரும், தென்னிந்திய திருச்சபை பொதுச்செயலாளருமான பெர்னாண்டஸ் ரத்தினராஜா பேசியதாவது:

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராளுமன்றத்தில் மறுசீரமைப்பு மசோதா தோல்வியடைந்துள்ளது மகத்தான வெற்றி. எடப்பாடி பழனிசாமி, பாஜவின் முகமூடியை அணிந்து கொண்டு, மசோதா மூலம் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது. எண்ணிக்கை கூடிவிடும் என கூறினார். அவர் பாஜவில் சேர்ந்து, அக்கட்சியின் ஊதுகுழலாக மாறி விட்டார். இதனை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜ மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என்ற அஜண்டாவில் உள்ளார்கள். அவர்கள் இந்துக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல. பதவிக்காக மதக்கலவரத்தை தூண்டி விட்டு, அதன் மூலம் வாக்கை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் வந்தவர்கள்.

பாஜ தமிழ்நாட்டில் கால் ஊன்றக் கூடாது என்பதில் கிறிஸ்தவர்கள் முனைபுடன் இருக்க வேண்டும். அனைவருக்குமான நல்வாழ்வை யார் தருகிறார்களோ, அவர்களை ஆதரிக்கிறவர்களே கிறிஸ்தவர்கள். சட்டபூர்வமான திருட்டை செய்கிறது ஒன்றிய அரசு. இந்தியாவின் கலாச்சாரத்தை, பன்முகத்தன்மையை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, அதன் மூலம் வாக்கு வாங்கியை பெருக்கி கொள்ள வேண்டும் என பாஜ நினைக்கிறது. அடுத்ததாக ஒருவர் வந்துள்ளார் தனி விமானத்தில் வருகிறார். நான் கம்பர்ட் ஜோனில் இருந்து வந்துவிட்டேன் என்கிறார்.

கம்பர்ட் ஜோன் என அவரது குடும்பத்தை கூறுகிறாரா என தெரியவில்லை. உங்களுக்காக வருகிறேன் என கூறுகிறார். இந்த மக்களை ஏமாற்ற வருகிறார். அவர் பாஜவின் ஏஜென்டாக வருகிறார். நடிகராக பார்க்க வேண்டும் என்றால் சினிமாவிற்கு சென்று பார்க்கலாம். சினிமாவில் 10 நாள் பயிற்சி எடுத்துக் கொண்டு நடிக்கலாம். மக்கள் பணியை வேஷம் போல் நினைத்துக் கொண்டு செய்ய முடியாது. பதவிக்கு வருவதற்குள் செக்யூரிட்டி போட்டு ஆட்களை மிதித்து தள்ளி விட்டு போய்கொண்டு இருக்கிறார்கள்.

ஏசி கேரவேனில் அமர்ந்து கொண்டு கையை காட்டி விட்டு செல்பவர்கள் நமக்கு தேவையில்லை. மேலோட்டமாக அரசியல் செய்பவர்கள் நம்மை அடமானம் வைத்து அரசியல் செய்து விடுவார்கள். நாளை இவர்கள் பாஜவுடன் இணைந்து விடுவார்கள். சிபிஐ விசாரணைக்கு போனார். அங்கு 2 நாட்கள் ஓட்டலில் தங்கினார், வெளியே வந்து விட்டு இன்று பாஜவின் மற்றொரு ஊதுகுழலாக நடிகர் இருக்கிறார். நீங்கள் பாருங்கள், ரசியுங்கள்.

ஆனால் வாக்களிக்காதீர்கள் அவர் நடிகர். வாக்களிக்க வேண்டாம் என உங்களின் குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்கள் என அனைவரிடம் கூற வேண்டும். கிறிஸ்தவர்கள் ஓரணியில் இருந்து திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ஆலயங்களில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

* ‘ஜோசப் என்ற பெயருடன் வருபவர் போலியானவர்’
பெர்னாண்டஸ் ரத்தினராஜா கூறுகையில், ‘‘ஜோசப் என்ற பெயருடன் வரும் ஒருவர் போலியானவர். அவருடன் நமக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை அவர் கிறிஸ்தவர்களுக்கான குரல் கொடுத்தது இல்லை, சிறுபான்மை மக்களை காக்க வீதியில் இறங்கி குரல் கொடுக்கவில்லை. யாரோ கொடுக்கும் ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் நடித்துக்கொண்டு இருக்கிறார்’’ என்றார்.

Tags : AC ,BJP ,Vijay ,DMK ,Christian Welfare Organization ,Karaikudi, Sivaganga district ,Former ,Union Finance Minister ,P. Chidambaram ,Congress ,Mangudi MLA ,Mayor ( ,Po) Gunasekaran ,Christian Welfare Organization's… ,
× RELATED அமித்ஷாவை வரவேற்க சென்ற அண்ணாமலை;...