உடுமலை, ஏப். 14: அமராவதி பிரதான கால்வாய் கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டு வருகிறது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதான கால்வாய் செடிகொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. கரைப்பகுதி இடிந்து மண் சேர்ந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அமராவதி பிரதான கால்வாயை சீரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிதி ஒதுக்கினார். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கரை மிகவும் பலவீனமான இடங்களில் இரும்பு கம்பிகள் கட்டி கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இரு கரைகள் மற்றும் தரைத்தளத்தில் நேர்த்தியாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, அணையில் இருந்து 19.5வது கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணாபுரம் கஞ்சம்பட்டி புதூரில் பணிகள் நடக்கிறது. மேலும், புதர் மண்டிய இடங்களில் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்தால் கடைமடை பகுதி வரை பாசனத்துக்கு எளிதில் தண்ணீர் செல்லும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
