உடுமலை, ஏப். 13: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. விடுமுறை காலங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு, அருவியில் குளித்து செல்வார்கள். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கோடை வெயில் கொளுத்துவதால் சுற்றுலா பயணிகள் மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர். அதன்படி, நேற்று திருமூர்த்தி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பஞ்சலிங்க அருவியில் குறைந்தளவே தண்ணீர் விழுந்தது. இருப்பினும் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
