திருப்பூர், ஏப். 14: திருப்பூர் தெற்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 116 பேர் போட்டியிடுகிறார்கள். முதற்கட்டமாக திருப்பூர் தெற்கு தொகுதிக்கு 346 வாக்குச்சாவடிகள், 346 கட்டுப்பாட்டு கருவிகள், 375 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. திருப்பூர் தெற்கு தொகுதியில் 24 வேட்பாளர்கள் என்பதால் கூடுதலாக 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்வது குறித்து, வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.இதற்கு தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தர்மேந்திர சிங் தலைமை தாங்கி பேசினார். தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான அமித் முன்னிலை வகித்தார். இதில், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான துணை கமிஷனர் சுந்தர்ராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனா்.
