×

உரிய ஆவணம் இல்லாத 23 கிராம் தங்க நகை ரூ.4 லட்சம் பறிமுதல்

தண்டையார்பேட்டை, ஏப்.10: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி ரயில் பயணி கொண்டு வந்த 23 கிராம் தங்கம், ரூ.4 லட்சத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, உரிய ஆவணமின்றி பயணிகள் கொண்டு செல்லும் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த டபுள் டெக்கர் ரயிலில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் அழைத்து சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 800 மதிப்புள்ள 23 கிராம் தங்கம், ரூ.4 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில், வாணியம்பாடியை சேர்ந்த முகமது ஆசிப் (20) என்பதும், இந்த பணம், நகைக்கு அவரிடம் உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து துறைமுகம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதேபோல், புரூலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் ரூ2.5 லட்சம் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா சிக்கியது.

Tags : Thandaiarpet ,Railway Protection Force ,RPF ,Bengaluru ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.66 கோடி விடுவிப்பு