×

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிக்கு 2ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் 19,604 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

சென்னை, ஏப். 9: சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டாம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 அட்டவணை இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலராக, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 இதர பாலினத்தவர்கள் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களாக உள்ளனர். 4,079 வாக்குச்சாவடிகளும் மற்றும் 6 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 4,085 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 978 இடங்களில் இவ்வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. சென்னை மாவட்டத்தில் 978 இடங்களில் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் 17 இடங்களில் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இவற்றில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, ராயபுரம் மண்டலம், சூளை, இராட்லர் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினைப் பார்வையிட்டு, அங்கு தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சுகாதாரம் இணை ஆணையர் ஜெயசீலன் பார்வையிட்டு அங்கு தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்கு தேவையான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த 28ம் தேதி அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 16 சட்டமன்றத் தொகுதிவாரியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 4,085 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றிற்கு 19,604 வாக்குச்சாவடி அலுவலர்கள் இரண்டாம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், இணை ஆணையர் (கல்வி) கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,District Election Officer ,Kumaragurubaran ,Tamil Nadu Legislative Assembly General Election ,
× RELATED ஏரியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற உணவு டெலிவரி ஊழியர் மாயம்