சென்னை,ஏப்.10: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் காரணமாக சென்னையில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,66,75,283 விடுவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்- 2026ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறை மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000 மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை விடுவிப்பதற்கு மேல்முறையீட்டு அலுவலர்கள் அடங்கிய குழு சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை விடுவிக்க மேல்முறையீடு செய்பவர்கள் மனுவினை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, விடுவிப்பு ஆணையினைப் பெற்று, அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அல்லது ரொக்கத்தினை பறக்கும் படை அலுவலர் மூலமாக விடுவிப்பு ஆணையினை கருவூலத்தில் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத்தை விடுவிக்கக் கோரி இதுவரை 113 மேல்முறையீடுகள் பெறப்பட்டு, 8.4.2026 வரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 98 மேல்முறையீடுகளில் ரூ.1,66,75,283 விடுவிக்கப்பட்டுள்ளது. 15 மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
