×

ஏரியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற உணவு டெலிவரி ஊழியர் மாயம்

வேளச்சேரி, ஏப்.9: வேளச்சேரி அருகே உள்ள நாராயணபுரம் ஏரியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற உணவு டெலிவரி ஊழியர் நீரில் மூழ்கி மாயமானார். அவரை 2வது போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகின்றனர். வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் 4வது பகுதியை சேர்ந்தவர் சாய்ராம் (24). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்த இவர், தனது நண்பர் நவீன் குமார் (25) என்பவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு நாராயணபுரம் ஏரியில் உள்ள மழைநீர் கால்வாய் மேல் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.

அப்போது சாய்ராமின் செல்போன் திடீரென ஏரியில் விழுந்துள்ளது. இதையடுத்து சாய்ராம் தனது செல்போனை எடுப்பதற்காக ஏரியில் இறங்கி தேடி உள்ளார். அப்போது அவர் திடீரென நீருக்குள் மூழ்கி மாயமானார். உடனே கரையில் இருந்த அவரது நண்பர் நவீன்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சாய்ராம் நீரில் மூழ்கி வெகுநேரம் ஆனதால் அவர் இறந்திருக்க வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டதோடு, இரவு நேரம் என்பதால் அவரை உடனே தேடி முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து, ஜேசிபி உதவியுடன் சாய்ராம் உடலை தேடினர். ஆனால் அவரது உடல் நேற்று மாலை வரை கிடைக்கவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வாலிபரின் உடலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது நண்பர் நவீன்குமாரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தீயணைப்பு துறையினர் ஏரியில் இறங்கி சாய்ராமை தேடியபோது, மற்றொரு ஆணின் சடலம் கிடைத்துள்ளது. அது யாருடைய சடலம்? அவர் எப்படி இறந்தார்? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Velachery ,Narayanapuram lake ,department ,Pallikaranai ,Mayilai Balaji Nagar… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.30 லட்சம் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்