நன்றி குங்குமம் தோழி
‘‘முன்பு அனைத்து வீடுகளிலும் கயிற்றுக்கட்டில் இல்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கும். வீட்டு வாசல் அல்லது கொல்லைப்புறத்தில் காற்றோட்டமாக கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பது ஒரு தனி சுகம்தான். குடும்பமாக கயிற்றக்கட்டிலில் அமர்ந்து கொண்டு இரவு நேர உணவினை சாப்பிடும் போது சொர்க்கமாக இருக்கும். ஆனால், காலங்கள் மாற மாற நாகரீக வாழ்க்கைக்குள் நுழைந்தவுடன் மாடர்ன் மற்றும் ஃபேஷனுக்கு பின்னால் நாம் சென்றாலும், இன்றும் மக்கள் மனதில் இந்தக் கயிற்றுக்கட்டிலுக்கான மவுசு குறையவில்லை’’ என்கிறார் சூர்யா. இவர் சென்னை, கூடுவாஞ்சேரியில் கயிற்றுக்கட்டிலை ஒரு தொழிலாக எடுத்து ‘இழையம்’ என்ற பெயரில் மரச்சாமான்கள் கடையினை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சாதாரண பருத்தி நூலில் குழந்தைகளுக்கான தூளிக் கயிற்றினைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கயிற்றுக்கட்டில் மட்டுமில்லாமல் மற்ற மரச்சாமான்கள் அனைத்தும் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளம், சிம்லா போன்ற பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறார். ஒரு காலத்தில் வீட்டு மொட்டை மாடியில் இருந்து தொடங்கிய இவரது சிறிய முயற்சி ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் என்றளவில் பெரிய மாற்றத்தினை உருவாக்கி இருக்கும் சூர்யாவிடம் பேசினோம்.
‘‘அது கொரோனா காலம். லாக்டவுன், வேலை இழப்பு, பாதி சம்பளம் போன்ற அசாதாரணமான சூழ்நிலையினை உலகமே சந்தித்துக் கொண்டிருந்தது. அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நானும் அந்த சமயத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டேன். ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு மட்டுமில்லை என் கணவருக்கும் வேலையில் பிரச்னை ஏற்பட்டது. இனியும் இந்த வேலையை நம்பி இருக்க முடியாது என்று தெரிந்துவிட்டது.
ஒரு நிறுவனத்தில்தான் நம்மால் வேலை செய்ய முடியாது. ஆனால், ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியும் என்று உறவினர்கள், நண்பர்கள் பலரும் ஆலோசனை கொடுத்தனர். அப்போதுதான் என்ன தொழில் செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் பலரும் ஆரோக்கிய வாழ்க்கை முறையினை பின்பற்ற ஆரம்பித்தனர். இதனை புரிந்து கொண்டு இயற்கை சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்களின் விற்பனை அதிகமானது. நானும் அதே தொழிலில் ஈடுபடலாம்னு நினைத்தேன். ஆனால், எல்லாம் செய்வதையே நானும் செய்தால் பத்தில் ஒரு குதிரையாக அந்த மார்க்கெட்டில் நான் ஓட வேண்டி இருக்கும். அதனால் யாரும் செய்யாத ஒரு தொழிலை செய்ய முடிவு செய்தேன்’’ என்றவரின் இன்ஸ்பிரேஷன் அவரின் தாத்தாவாம்.
‘‘நான் வசிப்பது சென்னை என்றாலும், என் தாத்தாவின் வீடு செங்கல்பட்டு அருகே சிறிய கிராமம். விடுமுறை நாட்களில் நாங்க அங்கு செல்வது வழக்கம். அப்போது என் தாத்தா வீட்டில் ஒரு கயிற்றுக் கட்டில் இருக்கும். என் தாத்தா அதில்தான் ராஜா போல் உட்கார்ந்திருப்பார். கயிற்றுக்கட்டிலில் படுத்தால் நல்ல தூக்கம் வரும், முதுகுவலி வராது, உடல் சூடு குறையும் என்று தாத்தா அடிக்கடி சொல்வார்.
மேலும், தற்போது இதுபோன்ற கயிற்றுக்கட்டில் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை என்பதை தெரிந்து கொண்டேன். யாரும் அதை பயன்படுத்துவதும் இல்லை என்பதால், அதை மீண்டும் அழகான வடிவத்தில் கொடுத்தால் என்னவென்று எனக்குத் தோன்றியது. அப்படித்தான் நான் இந்தத் தொழிலில் என்னை ஈடுபடுத்த ஆரம்பித்தேன்’’ என்றவர், அந்தப் பயணம் குறித்து பகிர்ந்தார்.
‘‘கயிற்றுக்கட்டிலில் குழந்தைக்கு தூளி கட்டும் கயிற்றில்தான் நெருக்கமாக பின்னுவார்கள். எனக்கு அதை எப்படி பின்னுவார்கள், அதற்கான ஆட்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் நாம் கூகுளை தானே கேட்போம். அப்படித்தான் நானும் கூகுளின் உதவியினை நாடினேன். அதில் இது போன்ற கட்டில்கள் வெளிநாட்டில் தயாரிப்பதாகவும், அதன் விலை ஒன்றரை லட்சம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். நம்ம ஊரில் சாதாரணமாக எல்லோருடைய வீட்டின் திண்ணையில் இருக்கும் இந்த கயிற்றுக்கட்டிலுக்கு இவ்வளவு விலையா என்று ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு யூடியூப்பின் உதவியுடன் அந்தக் கட்டிலில் கயிற்றினை எவ்வாறு பின்னுவது என்று பார்த்து கற்றுக் கொண்டேன். அதன் பிறகு ஒரு அடியில் மரச்சட்டம் வாங்கி, அதில் கயிற்றை பின்னிப் பழகினேன்.
அந்த சின்னக் கட்டில் முழுமையடைந்த போது எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் பிறகு ெபரிய கட்டிலுக்கான மரச்சட்டம் வாங்கி பின்னிப் பார்த்தேன். நன்றாக வந்தது. நான் பின்னிய முதல் கட்டிலினை வீட்டில் பயன்படுத்தி பார்த்தோம். ரெம்பவே நன்றாக இருந்தது. அதை அப்படியே தொழிலாக மாற்றினேன்.ஆனால், தொழில் தொடங்கிய போது, மாடர்ன் பொருட்களை மட்டுமே விரும்பும் இந்தக் காலத்தில் இது போன்ற பழங்கால கழிற்றுக் கட்டிலை எல்லாம் வாங்குவார்களா என்று சந்ேதகமாகத்தான் எனக்கு இருந்தது. இதனை ஒரு தொழிலாக கொண்டு போக முடியுமா என்றெல்லாம் தயக்கம் இருந்தது.
கயிற்றுக்கட்டிலை பொதுவாக தேங்காய் நார், கற்றாழை நார், பிளாஸ்டிக் பட்டை, பிரம்பு, பனை நாரில் பின்னி விற்பனை செய்வதை பார்த்திருக்கி றேன். இவற்றையெல்லாம் தவிர்த்து புதுசா பருத்தி நூலில் பின்னினேன். அதற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி என் வீட்டு மொட்டை மாடியிலேயே ஆரம்பித்தேன். நான் பின்னிய கட்டிலை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
மக்கள் அதை பார்த்து விட்டு வீடு தேடி வந்து கயிற்றுக்கட்டிலை வாங்க வந்தார்கள். சிலர் அவர்கள் வீட்டில் இருக்கும் பழைய கட்டிலுக்கு புதிய கயிறு போட்டுக் கொடுக்க சொல்லி கேட்டார்கள். வாங்குவார்களா என்று தயங்கிய எனக்கு இதுவே ஒரு தொழிலாக மாறியது. நான் முதன் முதலில் பின்னிய கட்டிலினை 2,500 ரூபாய்க்கு விற்றேன். பழைய கட்டிலுக்கு பின்னிக் கொடுத்தால் 1,500 ரூபாய். இந்த பிசினஸ் துவங்கி இரண்டு வருடமாகிறது’’ என்றவர், கட்டில் மட்டுமில்லாமல் மற்ற மரச்சாமான் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘வெறும் கயிற்றுக்கட்டிலை மட்டுமே காலம் முழுதும் விற்பனை செய்ய முடியாது. காரணம், அதற்கான தேவை குறிப்பிட்ட அளவுதான் இருந்தது. அதனால் இதில் வேறு என்ன பொருட்களை உருவாக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். கட்டிலுடன் நாற்காலி, சோபா, ஸ்டூல், டைனிங் டேபிள் போன்றவற்றையும் வடிவமைக்க ஆரம்பித்தேன். மேலும், பெரிய பெரிய அலுவலகங்களில் தலைமை அலுவலர்கள் பயன்படுத்தும் சேர், திவான் நாற்காலி, ஊஞ்சல், ரோலிங் சேர், ஈஸிசேர், டீபாய் போன்றவற்றை தயார் செய்ய ஆரம்பித்தோம்.
இதற்காக தரமான மரங்களை வெளிமாநிலங்களில் இருந்து வரவழைத்தோம். பருத்தி நூலிழையால் தயாரிக்கப்படுகிற பர்னிச்சர் என்ற அர்த்தத்திலும், மரத்தை இழைப்பதன் மூலம் தயாராகிற வீட்டு உபயோகப் பொருட்கள் என்பதாலும் எங்களின் நிறுவனத்திற்கு இழையம் என்று பெயர் வைத்தோம். அடுத்து இதுதான் என்னுடைய முழு நேர பிசினஸ் என்றானதால், அதற்கான பெரிய இடம், வேலையாட்கள், ஆர்டர்களை டெலிவரி செய்வது, ஆர்டர்களை பெறுவது போன்ற மற்ற வேலைகளுக்கு எனக்கு உறுதுணையாக என் கணவரும் இந்தத் தொழிலில் முழுநேரமாக செயல்பட ஆரம்பித்தார். இதற்காக தனிப்பட்ட யூனிட் ஒன்றை அமைத்தோம். அதற்கும் என் கணவர்தான் உறுதுணையாக இருந்தார்.
கயிற்றுக்கட்டிலா என்று முகம் சுழிப்பவர் மத்தியில் பலர் என்னை அணுகி, ‘இந்த கயிற்றுக்கட்டிலைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன், நீங்க விற்கிறீர்களா’ என்று கேட்டு வாங்கி செல்கிறார்கள். ஒரு பொருளை தரமாக தயாரிக்கும் போது அது தோற்றுப் போகாது என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அந்த உள்ளுணர்வுகள்தான் என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மீண்டும் கயிற்றுக்கட்டிலினை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அது நிறைவேறிவிட்டது. எங்களுடைய ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் ஒவ்வொரு வீடுகளிலும் எங்களுடைய தயாரிப்புகளில் ஒரு பொருளாவது இருக்க வேண்டும். மேலும், உலகளவில் எந்த நாட்டுக்கு சென்றாலும் எங்களுடைய உழைப்பில் மின்னும் தயாரிப்புப் பொருட்கள் விற்பனையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சூர்யா.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்
