×

சுட்டும் விழிச்சுடரே..!

நன்றி குங்குமம் தோழி

‘‘பத்மா, குலதெய்வம் கோயிலுக்கு போக நாள் குறிச்சு வாங்கிட்டு வந்திட்டேன். வருகிற வெள்ளிக்கிழமை பூஜை. மாதவிக்கும், திவாகருக்கும், சுடருக்கும் சொல்லிட்டேன். தேவையானதை ரெடி பண்ணிக்கோ…” சொன்னான் அவள் கணவன் சூர்யா.

‘‘சரிங்க, நாளைக்கு கோயில் பூசாரிட்ட பேசி பூஜை சாமான் லிஸ்ட் வாங்கிடுங்க. அப்புறம் உங்க தங்கச்சி சுடர் நம்ம கூட வர வேணாம். மாதவி கார்ல வரச்சொல்லிடுங்க. நம்ம பொண்ணு கல்யாணம். கல்யாணப் பொண்ணை கூட்டிட்டு போகும்போது சுடரெல்லாம் கூட வர வேணாம். கோயிலுக்கே வரலைனாலும் ஒண்ணும் குறையில்ல. ஆனா, அதுக்கு உங்க தம்பி திவாகரும், சின்ன தங்கச்சி மாதவியும் என்னைத்தான் ஏதாவது பேசுவாங்க.”

சுடர்விழி,இளம் வயதிலேயே விதவையாகி, ஒரு பெண் குழந்தையுடன் பிறந்த வீட்டில் இருந்தாள். மாநில அரசு அலுவலகத்தில் வேலையிருந்ததால், சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்தாள். பத்மா, சூர்யாவை கல்யாணம் செய்து வீட்டிற்கு வந்ததிலிருந்து, யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது சுடரின் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவாள். விதவையான சுடர் எதை செய்தாலும் அபசகுனம் என்று சொல்லி அவளை விலக்கியே வைப்பாள். நாளடைவில் சுடர் தானாகவே எல்லாவற்றிலுமிருந்து விலகியிருந்து தன்னை மிகவும் சுருக்கிக்கொண்டாள். சுடரின் அப்பா, அம்மா இறந்த பிறகு அதிகமான அண்ணி பத்மாவின் வேதனை தரும் வார்த்தைகளையும்,செயல்களையும் சுடரால் ஜீரணிக்க முடியவில்லை.

அதைவிட தன் பெண்ணும் வளருவதால் அவள் மனது பாதிக்கப்படும் முன்னர், தனக்கும் ஆபீஸ் பக்கம், மகளுக்கும் ஸ்கூல் பக்கம் என்று சொல்லி, தங்கை மாதவி வீடிருக்கும் ஏரியாவில் தனியாக வீடு பார்த்து போய்விட்டாள்.சென்னை போக்குவரத்தில், அடுத்த ஏரியா என்பது அடுத்த ஊர் போலத்தானே. பத்மாவின் குணம் தெரிந்த சூர்யா, சுடரின் மனமறிந்து, ஒன்றும் சொல்லமுடியாமல், சுடர் நன்றாக இருக்கட்டும் என்று அனுப்பிவிட்டான். தம்பி திவாகருக்கு மதுரையில் வேலை. அதனால் அவன் குடும்பம் அங்கே. சின்ன தங்கை மாதவிக்கும் அவள் விரும்பிய பையனுடனே சமீபத்தில் கல்யாணம் முடிந்து உள்ளூரிலேயே இருக்கிறாள்.

சுடருக்கே,நெருப்பின் சூட்டைக் காட்டினாள் அண்ணி பத்மா. சுடர் தீபச்சுடராக அமைதியாக இருந்தாள். சுடர் மறு பேச்சே பேசமாட்டாள். பத்மாவை சும்மா பார்ப்பாள். அவள் கண்களிலேயே மொத்த வலியும் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். உதடுகள் மென்மையாக, உயிர்ப்பில்லாத புன்முறுவலை உதிர்க்கும். பத்மா, சுடரின் கண்களை பார்க்க பார்க்க மெதுவாக தான் பலமிழப்பதை அப்போது உணர்ந்தாலும், அடுத்த சந்தர்ப்பம் உருவாக்கி, தயக்கமில்லாமல் சூட்டை தொடர்வாள்.

‘‘இப்ப நீ இதை செய்யலைன்னு யார் அழுதாங்க இங்க”, ‘‘உனக்கே தெரிஞ்சு ஒதுங்கிக்க வேண்டாமா”, ‘‘போச்சு… வந்து நின்னுட்டியா, காரியம் முடிஞ்சா மாதிரிதான்”, “எப்படித்தான் இப்படி எல்லோர் கூடவும் உட்கார்ந்து விருந்து சாப்பிட முடியுதோ உன்னால” இவைதான் அண்ணி பத்மா சாதாரணமாகவே சுடரிடம் பேசும் வார்த்தைகள்.

எல்லாத்துக்கும் மேல, ஈயம் காய்ச்சு ஊத்தியது போல, அன்னைக்கு அவர் மகளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று அண்ணன் சூர்யா ஃபோனில் சொல்ல, மாதவியும், அவள் கணவரும் கிளம்ப, அவர்களுடன் இவளும் வந்து விட்டாள். அண்ணன் கூப்பிட்டான். இவள் வந்தாள். அவ்வளவுதான்.

மாதவி அந்தப்பக்கம் நகர்ந்ததும், ‘‘அண்ணன் ஒரு பேச்சுக்கு கூப்பிட்டா இப்படித்தான் வந்து நிப்பியா, நாமதான் வாழல, என்ன பாவம் செய்தோமோ…அடுத்தவங்களாவது வாழட்டுமே என்ற எண்ணமே வராதா உனக்கு.
நெத்தியில பொட்டுவச்சு, கலர் கலரா புடவை கட்டிக்கிட்டா மட்டும் நீ அறுத்துட்டவ என்பது இல்லைன்னு ஆகிடுமா?”

பத்மா ஏதோ சொல்கிறாள், தங்கை சுடர் அழுகிறாள். கேட் திறக்கும் சத்தம். வீட்டைவிட்டு கிளம்பி போய்விட்டாள் சுடர். எல்லாம் கவனித்தாலும், கவனிக்காதது போல் அண்ணன் சூர்யா. இது அவன் பெண்ணின் கல்யாண விஷயம். அதனால் பத்மா பேச்சில் நியாயம் இருக்கலாம். தங்கை அழுகையுடன் கிளம்பிவிட்டதை தடுக்கவில்லை, ஒரு தகப்பனாக. ஆச்சு… கல்யாணமும் முடிந்தது. பத்மாவின் மகளும் மாப்பிள்ளையுடன் அவர் வேலையிலிருக்கும் ஆஸ்திரேலியாக்கும் போய்விட்டாள். நாட்களும், மாதங்களும் ஓடின. மதுரையில் திவாகரின் மனைவிக்கு வளைகாப்பு. மாதவியின் கணவர் ஆபீஸ் வேலையாக டெல்லி போயிருக்க, வேறு வழியில்லாமல் மாதவியும், சுடரும் சூர்யாவுடன் மதுரைக்கு பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

பத்மா சூர்யாவிடம் புலம்பினாள். “இப்போ இந்த சுடர் வரணும்னு என்ன அவசியம். மாதவிய மட்டும் கூட்டிட்டு போகலாம். நீங்க சொன்னாதான் சுடர் கேட்பா. சொல்லுங்க…” சூர்யாவை நச்சரித்தாள். ‘‘சுடரையும் அழைத்து போனால் மட்டுமே உங்க காரில் வரேன் அண்ணா. இல்லாட்டி நானும், சுடரும் தனியாக என் காரில் டிரைவர் போட்டு மதுரை வருகிறோம். அதுவுமில்லாம எனக்கு திருச்சியில ரெண்டு நாள் டிரெயினிங் இருக்கு. வளைகாப்பு முடிச்சு நான் திருச்சி போயிடுவேன். சென்னைக்கு சுடர் அக்காவை ரிட்டன் நீங்கதான் கூட்டிட்டு வரணும். அதையும் ஞாபகம் வச்சுக்கோ அண்ணா…” முடிவை சொன்னாள் மாதவி. வேற வழியில்லாம பத்மாவின் முணுமுணுப்பிற்கு தன் காதுகளை செவிடாக்கி சூர்யா இரண்டு தங்கைகளையும் தன்னுடனே அழைத்து போனான்.வளைகாப்பு முடிந்து, சொன்னது போல மாதவி திருச்சிக்கு கிளம்பிவிட்டாள். சுடரை அணைத்தவாறு, ‘‘சாரிக்கா… வழக்கம் போல அண்ணி என்ன சொன்னாலும் கண்டுக்காதே… கவலைப்படாம சூர்யா அண்ணனோடு வீட்டுக்கு கிளம்பு. நான் ரெண்டு நாளில் வந்திடறேன்…”

அமைதியாக சூர்யா கார் ஓட்ட, பத்மா அவனருகில் வாயாடிக்கிட்டு வர, சுடர் அமைதியாக புத்தகம் ஒன்றை வாசித்தவாறு பின் சீட்டில் உட்கார்ந்திருந்தாள்.நல்லவேளை, மகள் பெங்களூரில் காலேஜ் ஹாஸ்டலில் இருப்பதால் சுடர் மட்டுமே வளைகாப்புக்கு வந்திருந்தாள். உளுந்தூர்பேட்டை நெருங்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் விதி கொடுமையாக விளையாடிவிட்டது. எதிரே வேகமாக வந்த டாங்கர் லாரி கன்ட்ரோலை இழந்து, சூர்யாவின் காரில் நேரடியாக மோதி, காரை இரண்டு புரட்டு புரட்டிப்போட்டது. லோக்கல் ஆஸ்பிட்டலில் முதலுதவி செய்யப்பட்டு, மூவரையும் சென்னையில் அட்மிட் செய்தாகிவிட்டது. மாதவி டிரெய்னிங் கேன்சல் செய்து, திவாகரும், அவளும் கிளம்பி வந்து எல்லாம் வேகமாக நடந்தது. தீவிரமான சிகிச்சையாலும் பலனில்லை. சூர்யாவை காப்பாற்ற முடியவில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர்.

பத்மாவின் முகத்தில் காரின் கண்ணாடிகள் கிழித்து ஆழமான காயங்கள். தோள்பட்டை எலும்பில் சர்ஜரி தேவைப்பட்டது.கால்களில் எலும்பு முறிவும்,சேதமும். மற்ற இடங்களிலும் காயங்கள். சுடர், பின் சீட்டில் உட்கார்ந்திருந்ததில், உருண்ட காரோடு அவளும் சீட்டுக்கடியில் விழுந்து உருண்டு, தலையில் பலத்த காயம். தீவிர சிகிச்சையில் இருவருக்கும் சுயநினைவு வந்தது. சூர்யாவின் மறைவு அவர்களிடம் தற்காலிகமாக மறைக்கப்பட்டது.

“சூர்யா எப்படி இருக்கார், பார்க்கணும்….” கேட்டுக்கொண்டேயிருந்தாள் பத்மா. இரண்டாம் நாள் டாக்டர்கள் அடுத்த குண்டை போட்டார்கள்.
“கண்ணாடி கிழித்து கண்களில் உண்டான காயத்தில் பத்மாவிற்கு பார்வை போய்விட்டது. சுடருக்கு முதுகெலும்பில் ஏற்பட்ட அடியில், மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. உடனே சுடருக்கு சர்ஜரி செய்யணும். சர்ஜரி செய்தாலும் கண்டிப்பா காப்பாற்ற முடியும்னு சொல்லமுடியாது. மூளைச் சாவும் ஆகலாம், கை கால்கள் பேரலைஸ் ஆகலாம்” என்று சொல்லி கையெழுத்து வாங்கினார்கள். சுடரின் மகளை சமாதானப்படுத்த முடியவில்லை.
சுடரின் மகளுடன் திவாகரும், மாதவியும் டாக்டருடன் உள்ளே சுடரைப் பார்க்க வந்தனர். சுடரால் அழக்கூட முடியவில்லை. மிகவும் பலவீனமான குரலில் பேசினாள்.

‘‘டாக்டர் எனக்கு என்ன பிரச்னைன்னு சொன்னார். நான் சர்ஜரியில் பிழைத்து வந்தால் சந்தோஷம். இல்லைன்னா… என் கடைசி ஆசையா இப்ப நான் சொல்றத நீங்க செய்தே ஆகணும்…’’ தனது கடைசி ஆசையையும் சொன்னாள்.
“எனக்கென்று இதுவரை நான் எதுவும் கேட்டதில்லை. என்னுடைய இந்தக் கடைசி ஆசையை நீங்க மூணு பேரும் நிறைவேத்தியே ஆகணும். ஆனால், எந்த சூழ்நிலையிலும் என் கடைசி ஆசை இதுதான் என்று பத்மா அண்ணியிடம் சொல்லவே கூடாது. அவங்க மறுத்திடுவாங்க. நான் ஏற்கனவே டாக்டரிடம் சொல்லிட்டேன்…’’

பத்மாவிற்கு தேவையான சர்ஜரிகள் நடந்தன. சுடருக்கும் மூளையில் சர்ஜரிக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால், சர்ஜரிக்கு முன்பே சுடருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டது.
பல வருடங்களாக பலவிதமான விமர்சனங்களையும், வார்த்தைகளையும் கேட்டு, உள்ளேயே பொத்தி பொத்தி வைத்திருந்த அந்த மூளை, வலியின் பாரம் தாங்க முடியாமல் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டது. பத்மா கண் விழித்ததும் விடாமல் தொடர்ந்து சூர்யாவை கேட்டுக்கொண்டே இருந்தாள். ‘‘அவருக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்காரு? ஏன் மாதவி என்னை பார்க்கவே வரல அவர்..?’’

வேற வழியில்லாமல் நர்ஸை விட்டு சூர்யா பற்றி சொல்ல சொன்னார்கள். கதறியழுதவளிடம் நர்ஸ், ‘‘உங்களுக்கு கண்ணில் ஆபரேஷன் நடந்து கட்டுப்பிரிச்சு இன்னும் ஒருவாரம் கூட ஆகல. நீங்க இப்படி எமோஷனலாகி அழக்கூடாது…” வெளியில போய் குடும்பத்தாரிடமும் இதையே சொல்லிட்டு போனார் நர்ஸ். மூளையைத் தொடர்ந்து சுடரின் இதயத் துடிப்பும் சில நாட்களில் ஓய்வெடுத்துக் கொண்டது. அமைதியாக ஒளி வீசிய சுடர், அமைதியாக அணைந்தும் விட்டது.

இன்று வீட்டில் சூர்யாவிற்கு படையல் போட்டு பூஜை நடக்கிறது. ஒரு மாதமாகியிருந்தும் இரட்டை துயரத்தில் குடும்பமே தத்தளித்திருந்தது. உறவினர், நண்பர் கூட்டம் வந்து, என்றுமே ஆற முடியாத துயரத்திற்கு ஆறுதல் சொல்லி போனார்கள். விடாமல் அழுது கொண்டிருந்த அம்மா பத்மாவிடம் வந்த அவள் மகள், ‘‘உனக்கு நிறைய முக்கிய சர்ஜரிகள், கண்கள் உள்பட நடந்திருக்கும்மா… நீ இப்படி எமோஷனலாகி அழக்கூடாது” என்றாள்.

‘‘அங்க பாரு உங்கப்பா முகத்த… சாகற வயசா அவருக்கு. அந்த முகத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கே…”எழுந்து வாக்கர் உதவியுடன் நடந்து போய் கணவன் போட்டோவை குனிந்து அருகில் ஏக்கத்துடன் பார்த்தாள்.
பக்கத்தில் மாலையுடன் இருந்த சுடரின் படம் கண்களில் பட, அதை வெறித்தவள், ‘‘அப்பவே சொன்னேன், இந்த தாலி அறுத்தவ நம்ம வண்டியில வரவேணாம்னு…கேட்டாங்களா. இப்போ இப்படி அவ என் தாலிய அறுத்துட்டாளே…” சொல்லி சொல்லி அழுதாள் பத்மா.
எல்லோரும் திகைப்பும், அதிர்ச்சியுமாக, ‘‘இந்த நேரத்திலுமா?” என்பது போல் திவாகரையும், மாதவியையும் பார்த்தனர்.
சுடர் இறந்த பிறகும், தன் கணவனை பறி கொடுத்த நிலையிலும் இன்னமும் எல்லோர் முன்னாடியும் சுடரை பழித்துக் கொண்டே இருந்த அம்மாவின் செய்கையை அவர் மகளால் ஏற்றுக்கொள்ள முடியல.
‘‘இப்படி அப்பாவின் முகத்தைப் பார்த்து பார்த்து பரவசப்படறியே… இப்போ நீ பார்க்கறதே நீ சொல்ற அந்த அறுத்துட்ட சுடர் அத்தையின் கண்களால் தான். விபத்துல பார்வை போன உனக்கு அவங்கதான் அவங்களோட கடைசி ஆசையாய் தன் விழிகளை கொடுத்திட்டு உயிர் விட்டிருக்காங்க” என்றாள்.

ஏற்கனவே உடலும், மனமும் மிகவும் பலவீன நிலையில் இருந்தவள், இவ்வளவு பெரிய உண்மையின் தாக்குதலை தாங்குகிற பலமில்லாம மயங்கி சரிந்தாள் பத்மா.
இப்போதெல்லாம் கூரான கத்தி போல சொற்களை கொட்டும் பத்மாவின் குரலே இல்லை அந்த வீட்டில். கண்ணாடியில் தன் முகம் பார்க்க நேரும் போதெல்லாம், இருபத்து நான்கு மணி நேரமும், மனதின் இந்த பிதற்றல் ஓயவே இல்லை.
“சுடர்விழி அப்போ மாதிரியே என்னை பார்த்துக்கிட்டே இருக்கா… சுடர்விழி கண்களில் எப்போதும் தேங்கிக் கிடக்கும் வலி இப்பத்தானே எனக்கு உரைக்கிறது. அவளோட வலியை நான் உணரத்தான் இந்தக் கண்களை கடவுள் இடம் மாற்றி இருக்கிறார். சுடரின் இந்த விழிகள் எனக்கு வரமா? தண்டனையா? தெரியலையே சாமி…’’

தொகுப்பு: சுமதி ராணி

Tags : Kumkum ,Padma ,Madhavi ,Divakar ,Sudar ,Surya ,
× RELATED கிச்சன் டிப்ஸ்