நன்றி குங்குமம் தோழி
கையால் செய்யப்படும் கலை வேலைப்பாடுகள் நம் பாரம்பரியத்தை வெளிக்காட்டினாலும் அதிலும் நாளுக்கு நாள் புதுமைகளை புகுத்த தொடங்கிவிட்டனர் நம் பெண்கள். புதுப்புது யுக்திகளை கையாண்டு தம் கற்பனைத் திறனை பயன்படுத்தி கைவினைகளுக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புது வடிவத்தினை கொடுத்து வருகின்றனர். நவீனத்தின் வேகத்தில் காலம் இருந்தாலும் கைகளாலேயே பலர் நவீனத்தைக் காட்டுகின்றனர். அந்த வகையில் மண்டலா ஆர்ட் என்ற கலையும் நவீனம் பெற்றுள்ளது. மண்டலா கலை, வட்ட வடிவமாக வடிவியல் வடிவங்களை பயன்படுத்தியும் புள்ளிகளாலும் வரையப்படும் ஓவியக் கலையாகும். இது ராஜஸ்தானிய மக்களால் தரையிலும் சுவரிலும் வரையப்பட்டது. இதுவும் இந்தியாவின் பாரம்பரிய கலைதான். மனதை ஒரு நிலைப்படுத்தி அமைதியை தரும். சமஸ்கிருதத்தில் ‘மண்டலா’ என்றால் வட்டம் என்று பொருள். இக்கலை பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கையின் முழுமையை குறிப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஓவிய வடிவமாக மட்டுமே இருந்த இந்த மண்டலா கலையினை துணிகளில் வரைந்து புதிய முயற்சி செய்து அசத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த லஷ்மி கண்ணன். ‘லஷ்மி கண்ணன் டாட் ஆர்ட்’ என்ற பெயரில் மண்டலா கலையினை கீ செயின், பரிசுப் பொருட்கள், அகல் விளக்குகள், கைப்பைகள், கடிகாரங்கள் போன்றவற்றில்தான் வரைந்து வந்துள்ளார். இன்று சேலைகள், ஜாக்கெட், துப்பட்டா போன்ற உடைகளில் வரைந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.
‘‘நான் சென்னை பொண்ணு. பிசினஸ் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சின்ன வயசில் நான் கர்நாடகா சங்கீதம் கற்றுக் கொண்டதால் அதற்கான பயிற்சியினையும் அளித்து வந்தேன். கணவருக்கு வெளிநாட்டில் வேலை என்பதால் நான் என்னை இது போன்ற விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். மண்டலா கலை என் அப்பாவிடம் இருந்து வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பொழுதுபோக்கிற்காக வரைந்தாலும், நன்றாக வரைவார். அவர் வரையும் ஓவியங்களை மற்றவர்களுக்கு பரிசாகவும் கொடுப்பார். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட நானும் அப்படியே வரைய ஆரம்பித்தேன். அப்பாவும் எனக்கு கைட் செய்ததால், ஓவியம் மற்றும் வண்ணங்களைப் பற்றிய அறிவு எனக்கு நன்றாக இருந்தது. நானும் மற்றவர்கள் போல் சாதாரண ஓவியங்கள் வரைய விரும்பவில்லை. அந்தத் தேடலின் விடைதான் மண்டலா. அதன் பிறகு முழுக்க முழுக்க மண்டலா ஓவியங்களை நான் பல வடிவங்களில் கொடுக்க ஆரம்பித்தேன். இதில் இரண்டு வகைகள் உண்டு. டாட் மண்டலா மற்றும் வடிவியல் வடிவங்கள் கொண்ட ஃப்ரி ஹாண்ட் மண்டலா. நான் ‘டாட் மண்டலா ஸ்பெஷலிஸ்ட்’’ என்றவர்,
தன் கைவினைக் கலைப் பயணத்தை விவரிக்கிறார். ‘‘வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல் இருக்கு. அதுதான் மண்டலா கலையின் தத்துவம். வாழ்க்கை எங்கே தொடங்குதோ அங்கேயே முடியும். வரும் போதும் ஒண்ணுல்ல… போகும் போதும் ஒண்ணும் இருக்காது என்ற கோட்பாட்டின் அடிப்படையைதான் மண்டலா கலை உணர்த்துகிறது. இந்த ஓவியத்தை நானாக கற்று தெரிந்து கொண்டேன். பத்து வருடமாக இதனை வரைந்து வருகிறேன். தற்போது பயிற்சியும் அளிக்கிறேன். கற்கள், கண்ணாடி கோப்பைகள், செராமிக்ஸ், மரத்தாலான பொருட்களில் மண்டலா வரைந்து கீசெய்ன்ஸ், கடிகாரங்கள், கிஃப்ட் ஆர்ட்டிகல்ஸ் செய்து விற்கிறேன். தற்போது மூன்று மாதங்களாக பேப்ரிக்கில் மண்டலா செய்து வருகிறேன். இதற்கு அக்ரலிக் பெயின்ட்தான் பயன்படுத்துகிறோம். மண்டலா ஓவியங்களில் சின்ன கற்கள் முதல் பெரிய சுவர்கள் வரை வரையலாம். எளிதில் அழிந்துவிடக் கூடியது என்பதால் நீடித்திருக்க சில முறைகளை நான் கையாண்டு வருகிறேன்.
பொருட்களை உருவாக்குதல் கடினம். அழித்தல் எளிது என்பார்கள். இது மண்டலாவிற்கு மிகவும் பொருந்தும். வேலை அதிகம். ஆனால், அதன் நிலைத்தன்மை மிகவும் குறைவு. என்னைப் பொறுத்தவரை என் கையால் செய்த பொருள் கண்ணாடி பிரேம் போட்டு சுவற்றில் மாட்டி வைப்பது மட்டும் இல்லாமல் அன்றாட உபயோகத்தில் அதனை பயன்படுத்தப்படும் வகையில் இருக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தானாக வரும். தொடர்ந்து உபயோகிக்கும் போது அதன் வடிவம் மற்றும் வண்ணங்கள் மாறிவிடும்.அதனால் அவை நீடித்திருக்க மண்டலா கலையுடன் ரெசின் கலையும் இணைத்து பொருட்களை உருவாக்கித் தருவதுதான் என் சிறப்பு’’ என்றவர், விரும்புபவர்களுக்கு தாய்ப்பாலில் கூட ‘டாட் மண்டலா ஆர்ட்’ செய்து தருகிறார்.
‘‘என் கணவர் மேற் படிப்பிற்காக அமெரிக்காவில் இருந்தார். நாங்களும் அவருடன் சில காலம் இருந்தோம். அந்த வெளிநாட்டு வாழ்க்கை பலவிதங்களில் என்னை மாற்றியது. நம் நாட்டில் எல்லாவற்றிற்கும் மற்றவர்களை நாடுகிறோம். அங்கு வேலையாட்களுக்கு இந்திய மதிப்பில் சம்பளம் அதிகம். அதனால் எல்லா வேலைகளையும் நாமே தனியாக செய்ய பழகுவோம். விதிகளும் விதிமுறைகளும் அதிகம் என்பதால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து தவறுகள் நடக்காதபடி செய்ய கற்றுக்கொள்வோம். அப்படித்தான் அந்த ஊரில் கார் டிரைவிங் போன்ற பல விஷயங்களை நானாக செய்து என்னை வளர்த்துக் கொண்டேன். கிடைத்த நேரத்தில் ‘Waste to wealth’ என்ற அடிப்படையில் பயன்படாமல் தூக்கி எறியும் பொருட்களை எப்படி பயன்படும் பொருளாக மாற்றலாம் என யோசித்தேன். இங்கு பருப்பு கெட்டு விட்டால் குப்பையில் கொட்டுவோம். அதையே மீன், மயில் போன்ற உருவங்களாக மாற்றினேன். தமிழர்கள் அதிகம் இருந்த பகுதி என்பதால் அங்கிருந்த பெண்களும் குழந்தைகளும் சில அமெரிக்க குழந்தைகளும் என்னிடம் கற்றார்கள். அப்போதுதான் ஓவியமும் வரைய தொடங்கினேன். அதுவே நாளடைவில் மண்டலாவாக மாறியது’’ என்றவர், புடவையில் மண்டலா கலையை இணைத்தது பற்றி விவரித்தார்.
‘‘பெண்களுக்கு ஆடைகள் மேல் அலாதிப் பிரியம் இருக்கும். நானும் பெண்ணாக இருப்பதால் நான் அணியும் சேலைகள், சல்வார்கள் எதுவானாலும் அதில் 30 நாட்களுக்கு 30 வித்தியாசம் இருக்க விரும்பினேன். ஒருநாள் ஆரி வொர்க் செய்தது. மறுநாள் எம்பிராய்டரி, அப்புறம் ஹாண்ட் பெயின்ட் செய்தது என வித்தியாசம் காட்ட யோசித்த போது பிளவுஸ்களில் முதன் முதலாக கோலத்தை மண்டலாவாக போட்டேன். ரொம்ப அழகாக யுனிக்காக இருப்பதாக சொன்னார்கள். தெரிந்தவர்கள், நண்பர்கள் அவர்களின் விருப்பமான டிசைன்களையும் தந்து டாட் மண்டலாவாக வரைந்து தரச் சொன்னார்கள். ஆடைகளில் பெயின்டுடன் பேப்ரிக் க்ளு கலந்து வரைவதால் நீண்ட நாள் அழியாமல் இருக்கும். எல்லோரது வீட்டிலும் ஏதேனும் ஒரு கைவினைப் பொருள் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அது நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளம். அதைப் பார்த்து பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கும் அது புரியும்.
பொதுவாக கைவினைப்பொருட்களுக்கு உழைப்புக்கேற்ற விலையினை நிர்ணயிக்க முடிவதில்லை. இதற்கு இவ்வளவு விலையா என்கிறார்கள். அது வருத்தமாக உள்ளது. என் கையால் போட்ட மண்டலா பிளவுஸ்களை, ஆடைகளை எல்லோரும் அணிய வேண்டும் என்பது என் இலக்கு. மண்டலா போட ஆரம்பித்த பிறகு என் மனநிலை மற்றும் வாழ்வியலில் நிறைய மாற்றங்களை உணர்ந்திருக்கிறேன். எந்த நிலையிலும் பொறுமை அவசியம் என்பதை மண்டலா கற்றுத் தந்து இருக்கிறது. மண்டலா மன அமைதி தந்து நம்மை வழி நடத்தும் அற்புத தெய்வீகக் கலை’’ என்று கூறும் லஷ்மி கண்ணன், கல்லூரிப் பெண்கள் மற்றும் கலையை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
