×

சரித்திரம் படைத்த சரித்ரா சந்திரன்

நன்றி குங்குமம் தோழி

தமிழகத்தில் நம் ஈரோட்டு மண்ணில் வேர்களைக் கொண்ட ஒரு தமிழ் பெண் ஹாலிவுட்டின் உச்சாணி கொம்பை எப்படித் தொட்டார். ஹாலிவுட்டின் உச்சத்திற்கும் ஈரோட்டின் தெருக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடான இந்தப் பயணம் எப்படி சாத்தியமாச்சு? வாங்க, நடிகை சரித்ரா சந்திரன் வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் புரியும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே வெளிச்சத்தில் குழுமியிருக்க, பிரம்மாண்ட சிவப்பு கம்பள விரிப்பு… உலகமே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டார்கள்… பெரிய பெரிய இயக்குனர்கள்… எங்கு திரும்பினாலும் கேமரா ஃபிளாஷ்கள் என காட்சி அளிக்க…

சர்வதேச ஊடகங்களின் கேமராக்கள் குறிப்பிட்ட திசை நோக்கி திரும்புகிறது.ஆம்! அங்கு வந்து கொண்டிருப்பது சாட்… சாட்… நம்ம சரித்ரா சந்திரன்தான். Netflix நிறுவனத்தின் பிரம்மாண்ட
தயாரிப்பான, ‘ஒன் பீஸ்’ (One Piece) தொடரில் நீல நிறக் கூந்தல் இளவரசி விவி(ViVi) மிஸ் வெட்னஸ்டேவாக நடித்து உலகையே வியக்க வைத்த அதே சரித்ரா சந்திரனேதான் அது. ஆஸ்கார் விருது விழாவில் அவர் என்ட்ரி கொடுத்த விதம் வேற லெவலில் இருந்தது.ஆம்! சரித்ரா அணிந்து வந்திருந்த அடர் பச்சை வண்ண லாங் கவுனுடன், அவரின் கச்சிதமான சிகை அலங்காரமும் சர்வதேச ஃபேஷன் இதழ்களில் பெஸ்ட் டிரஸ் பட்டியலின் முதல் இடத்துக்கே அவரைக் கொண்டு சென்றது. அவரின் புகைப்படங்கள் இணையத்திலும் வைரலானது.

இது வெறும் ஆடை அலங்காரமோ ஒரே இரவில் கிடைத்த புகழோ இல்லை. அவரின் இந்த வெளிச்சத்துக்கு பின்னால் பல வருட உழைப்பும், மாபெரும் சவாலை அவர் எதிர்கொண்ட விதமும் இருக்கிறது.‘ஒன் பீஸ்’ என்பது 20 வருடங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கும், உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை கொண்ட ஒரு பெருந் தொடர். இந்தத் தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகபாவனை, குரல் மற்றும் உடல் மொழிகளைத் தங்கள் கற்பனையில் ரசிகர்கள் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்கள்.

நமது ஈரோட்டு பெண்ணான சரித்ரா சந்திரன் இதில் இளவரசி விவியாக(ViVi) நடிக்க போகிறார் என்கிற அறிவிப்பு இணையத்தில வந்தது முதலே, பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களும் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்தது. ஒரு தெற்காசிய பெண் இளவரசி விவியாவாக எப்படி இருக்க முடியும் எனப் பலரும் கேள்விகளை எழுப்பினர். தன்னைப் பற்றி இணையத்தில் வந்த விமர்சனங்களுக்கு சரித்ரா விளக்கங்களோ, பதிலடிகளோ கொடுக்கவில்லை. மாறாக, தனக்கு வழங்கப்பட்ட இளவரசி பாத்திரத்தின் ஆழத்தை தன் நடிப்பில் கொண்டு வரும் முயற்சிகளில் தன்முனைப்போடு இருந்தார்.

இளவரசி விவி பாத்திரம் வெறும் கவர்ச்சியானது கிடையாது. அந்த கதாபாத்திரத்தின் பின்னால் மிகப் பெரிய கதை இருக்கிறது. தனது நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்ற துடிக்கிற, மாபெரும் சுமையை சுமக்கின்ற ஆழமான கதாபாத்திரம் அது. சரித்ரா தனது அசாத்தியமான நடிப்பின் வழியாக இளவரசி விவி கதாபாத்திரன் வலியையும்… உறுதியையும்… உணர்ச்சியின் ஆழத்தையும் அப்படியே திரையில் வெளிப்படுத்தினார். அவரின் நடிப்புத் றன், ரத்தமும் சதையுமான விவியை மக்களின் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது. சரித்திராவின் அபார நடிப்பை பார்த்த ரசிகர்கள், அவரை விமர்சனம் செய்வதை நிறுத்தி வாய் மூடினார்கள்.

இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிவப்பு கம்பளத்தில் சரித்ரா நேர்த்தியாக வலம் வந்ததை பார்த்தபோது, பிறந்தது முதலே அவர் ஹாலிவுட் சூழலில் வளர்ந்தவரோ என பலருக்கும் எண்ணத் தோன்றியது. ஆனால், தன் குழந்தைப் பருவத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியை அவர் தமிழ்நாட்டில் ஈரோடு நகரில் தன் தாத்தா, பாட்டியுடன் கழித்தவர். சரித்ராவின் உண்மையான தொடக்கம் முற்றிலும் வேறானது.

ஈரோட்ல அவர் கழித்த குழந்தைப் பருவம் தமிழ் மொழி மீதும், தமிழர் கலாச்சாரத்தின் மீதும் ஆழமான பிணைப்பை அவருக்குள் உருவாக்க, பிறகு அவர் லண்டன் சென்று வளர்ந்தாலும், ஈரோட்டின் நினைவுகள் அவருக்குள் வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்திருக்கிறது. ஆம்! ஒரு மனிதனின் ஆளுமையை உருவாக்குவது பலதரப்பட்ட கலாச்சார அனுபவங்களே. ஒரு பக்கம் மேற்கத்திய வாழ்வியல், மறுபக்கம் ஆழமான தெற்காசிய வேர்கள். இரண்டையுமே ஒரே நேரத்தில் புரிந்துகொள்கிற திறனை இது அவருக்கு கொடுக்க, இந்தத் தெளிவு அவரின் கல்வியிலும் பிரதிபலித்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, Philosophy, Politics and Economics (PPE) படிப்பை தேர்ந்தெடுக்கிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிபிஇ படிப்பு என்பது பிரிட்டிஷ் பிரதமர்களையும், மிகப்பெரிய உலகத் தலைவர்களையும் உருவாக்குகிற இடம். உலகத்தின் மிகக் கடினமான ஆனால், பெருமைக்குரிய (Prestigious) படிப்பில் ஒன்று இது. சரித்ரா சந்திரன் இதை முடித்ததுமே, முன்னணி மேலாண்மை ஆலோசனை நிறுவனம் ஒன்றின் கன்சல்டிங் ஃபர்மில் அதிக ஊதியம் தரும் பணியில் இருக்கிறார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பார்வையில கோல்டன் டிக்கெட் இது. பாதுகாப்பான வேலை.

கலை ஈடுபாடு உள்ள மனசுக்கு இந்த பாதுகாப்பு ஒரு தங்க கூண்டு மாதிரி தோன்ற, மூளைக்கு வேலை கொடுக்கிற பாதுகாப்பான பணியை தூக்கி எறிந்துவிட்டு, ஆன்மாவுக்கு வேலை கொடுக்கும் ஆபத்தான பயணத்தை தேர்ந்தெடுக்கிறார். லண்டன் நேஷனல் யூத் தியேட்டரில் பகுதி நேர நடிகையாக நிச்சயமற்ற பயணத்தை தொடங்குகிறார். நடிப்பு துறை உத்திரவாதம் இல்லாத ஒன்று. நூற்றுக்கணக்கான ஆடிஷன்களில் அவர் நிராகரிக்கப்படும் அபாயமும் இருந்தது.

ஆனால், லண்டன் தேசிய இளைஞர் தியேட்டர் என்பது டேனியல் கிரேக், ஹெலன் மிர்ரன் மாதிரியான மாபெரும் கலைஞர்களை உருவாக்கிய இடம். இதில் நுழைவது ஆக்ஸ்போர்டில் நுழைவதை விடவும் கடினம். சரித்திரா கதாபாத்திரங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் அரசியல், சமூகப் பின்னணியினை ஆராய்ந்து நடிக்கும் ஆழத்தை, தான் பயின்ற கல்வியின் வழியாக உணர்ந்து தேர்ந்தெடுத்தார்.

விளைவு, சிறிய தியேட்டர் மேடைகளில் இருந்து Netflix எனும் உலகளாவிய தளத்திற்கு சரித்ராவால் புலிப் பாய்ச்சலில் பாய முடிந்தது.பிரிட்டிஷ் வரலாற்றுப் பின்னணி கொண்ட காதல் தொடர்களில் வழக்கமாக வெள்ளை இனத்தவர் மட்டுமே நடிக்க பார்த்திருப்போம். அப்படியே இந்தியர்கள் வந்தாலும், அவர்கள் ஆசியாவில் இருந்து வந்த வேலைக்காரர்களாகவோ அல்லது ஏதோ ஒரு காலனியின் பிரதிநிதிகளாகவோ மட்டுமே காட்டப்படுவர். ஆனால், சரித்ரா இந்தத் தொடரின் மையப் புள்ளியாக எல்லோரும் விரும்பும் நாயகி பாத்திரத்தில் தோன்றி நடித்தார். தெற்காசிய பெண் ஒருவர் இளவரசி கதாபாத்திரத்தில் நின்றது ஹாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹாலிவுட்டில் காலம்காலமாக பின்பற்றப்பட்ட காஸ்டிங் இலக்கணத்தை சரித்ரா ஏற்று நடித்த கதாபாத்திரம் முற்றிலும் மாற்றி எழுதியது. இதற்கு முன்புவரை, ஹாலிவுட்டில் கலர் பிளைண்ட் காஸ்டிங் முறையே இருந்தது. அதாவது, நடிகர்களின் நிறத்தை பொருட்படுத்தாமல் கதாபாத்திரங்களை வழங்குவது. ஹாலிவுட்டில் பல தசாப்தங்களாக நிலவி வந்த நிறவெறி மற்றும் அடையாள அரசியலால் பல தெற்காசிய நடிகர்கள் தங்கள் உண்மையான அடையாளத்தை மறைக்கவும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கு தங்களை மாற்றிக் கொள்ளவும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

ஆனால், சரித்ரா இதில் ஒரு பிரிட்டிஷ் உயர் வர்க்க பெண்ணின் உடைகளை அணிந்து, வெள்ளைக்கார பெண்ணாய் நடிக்கவில்லை. மாறாக தன் தெற்காசிய தமிழ் அடையாளத்தைக் கொண்டு வந்தார். எங்கள் நிறமும் எங்கள் மொழியும் எங்கள் அடையாளமும் எங்கள் கலாச்சாரமும் ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான காதல் கதைகளுக்கும் கச்சிதமா பொருந்தும் என்பதை தொடரில் ஆழமாகவே பதிவு செய்தார்.

தன் பழுப்பு நிறத்தையும், தமிழ் வேர்களையும் பெருமையாக முன் நிறுத்திய சரித்ரா, நம்முடைய அடையாளமே நமது பலம் என்கிற செய்தியை தனது கதாபாத்திரத்தில் நிரூபித்தார். எங்கோ ஒரு மூலையில தன் நிறத்தையோ அல்லது தன் பின்னணியையோ நினைத்து தயங்கி நிற்கும் இளம் பெண்களுக்கு சரித்ராவின் செயல் மிகப்பெரிய நம்பிக்கையை கண்டிப்பாக விதைக்கும்.

திரையில இவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர், ஆஸ்கர் மேடையையும் வெறும் கேமராக்களுக்கு போஸ் கொடுக்கிற இடமாக மட்டுமே பயன்படுத்தாமல், தான் அணிந்திருந்த அடர்பச்சை வண்ண உடையில் உலக அமைதியை வலியுறுத்தும் ‘ஆர்டிஸ்ட் ஃபார் சீஸ்ஃபயர்’ (Artists 4 ceasefire) என்ற வாசகம் பொறித்த ஒரு பவுட்சையும் (Pin) அணிந்திருக்க, இது பலரின் கவனத்தை ஈர்த்தது. நடிகை ஒருவர், தன் உலகளாவிய புகழை, இது போன்ற செய்திகளை சொல்ல பயன்படுத்துவது ஹாலிவுட்டின் இயல்பையே மாற்றி அமைக்கின்ற விஷயம். ஆஸ்கார் விழாவை இது மிகப்பெரும் விவாதமாக மாற்றியது.

சரித்ரா ஆர்டிஸ்ட் ஃபார் சீஸ்ஃபயர் பின்னை அணிந்து வந்தது வெறும் ஒரு ஃபேஷன் ஸ்டேட்மென்ட் கிடையாது. அது கலைக்கும் சமூகப் பொறுப்பிற்கும் இடையிலான நேரடி இணைப்பு. ஆழமான மெசேஜ். தன் கலையை வெறும் புகழுக்கான ஏணியாக மட்டுமே பார்க்காமல் ஒரு சமூகத்திற்கான பொறுப்பாகவும் பார்க்கிறார்.

ஆஸ்கர் மாதிரி கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் மேடையில் இது போன்ற குறியீடுகளை பயன்படுத்தும் கலைஞர்களே உலகளாவிய உரையாடலைத் தொடங்கி வைக்கிறார்கள். ஒரு நடிகர் என்பவர் 100% பொழுதுபோக்கு கருவி மட்டுமே என்கிற எழுதப்படாத விதி ஹாலிவுட்டில் நிலவ, இன்றைய GenZ தலைமுறை இதை தவறு என்பதுடன், உலகில் நடக்கும் துயரங்களுக்கு எதிராய் குரல் கொடுக்காத கலைஞர்களை ஏற்பதும் இல்லை.

ஈரோட்டின் தெருக்களில் தன் தாத்தா, பாட்டியுடன் விளையாடிய சிறுமி, இன்று லண்டனில் வளர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கடினமான ஒரு பட்டப்படிப்பை முடித்த பிறகு, தனக்குக் கிடைத்த கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, லண்டன் தியேட்டர்கள் மூலமாக தன் பெர்சனாலிட்டி இதுதான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்..

‘பிரிட்ஜெட்டன்’ தொடர் மூலம் ஹாலிவுட்டில் நீண்ட காலம் இருந்த நிறவெறி மற்றும் காஸ்டிங் பழமைவாதத்தை மாற்றி எழுதி, இன்று ‘அலெக்ஸ் ரைடர்’, ‘ஒன் பீஸ்’ தொடர் வழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, ஆஸ்கர் மேடையில தன்னோட சமூகப் பொறுப்பையும் பதிவு செய்திருக்கிற உலகளாவிய நட்சத்திரமாக சரித்ரா சந்திரன் உயர்ந்து நிற்கிறார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags : Charithra Chandra ,Erotu ,Tamil Nadu ,Hollywood ,Erode ,
× RELATED காலம் காலமாக மவுசு குறையாத கயிற்றுக்கட்டில்!