×

கற்பித்தலில் புது மாற்றத்தை விதைக்கும் கிராமப் பள்ளி!

நன்றி குங்குமம் தோழி

நம் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க உருவாக்கப்பட்டதுதான் கல்வியும் கல்விக்கூடமும். கல்வி என்ற அடித்தளம் சரியாக அமைத்துவிட்டாலே வாழ்க்கை என்ற அழகான கட்டடம் எழும்பிவிடும். ஒழுக்கத்துடன் கூடிய நிஜமான வாழ்க்கையை நடைமுறை கல்வியுடன் போதிக்கும் பள்ளிகளையே இன்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். குழந்தைகளும் புத்தகக் கல்வியை விட செய்முறை கல்வியையே அதிகம் நாடுகின்றனர். அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், வேடியப்பனூர் கிராமத்தில் 1999ல் ஆல்டிஸ், ரூடின் ஜாஸ்பர்ஸ் என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டு தம்பதியினரால் துவங்கப்பட்டதுதான் அருணாச்சலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. இது ஒரு தனித்துவமான கல்வி நிறுவனமாகும். இங்கு புத்தகங்கள் உண்டு… தேர்வுகள் இல்லை.

இப்பள்ளி ஏழை, எளிய மாணவர்களுக்கு கலை, இயற்கை விவசாயம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவை இணைந்த தரமான கல்வியை வழங்குவதால் வட்டாரத்தில் இப்பள்ளியில் சேர சிபாரிசுகள் ஏராளம். கிராமப்புறக் குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் குழந்தைகளின் முழுமையான அறிவு வளர்ச்சியையும் நல்லொழுக்கத்தையும் மையமாகக் கொண்டே இயங்கி வருவதுதான் இப்பள்ளியின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்கிறார் பள்ளியின் தாளாளர் ரம்யா. அவருடனான உரையாடலில்இருந்து…

‘‘ஆல்டிஸ் மற்றும் அவரது கணவர் ரூடின் ஜாஸ்பர்ஸ் ஸ்விட்சர்லாந்திலிருந்து திருவண்ணாமலைக்கு அடிக்கடி வருவார்கள். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்த காலம் அது. கிராமத்தில் குழந்தைகள் பள்ளிக்கு போகாமல் பூ பறிக்கும் வேலைக்கும், வயல் வேலைக்கும் செல்வதை பார்த்து ‘ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தையும் அர்த்தமுள்ள கல்வியையும் பெற தகுதியானவர்கள்’ என்ற உயரிய நோக்கத்தில் இப்பள்ளியை நிறுவினார்கள்.

2012ல் சமூக ஆர்வலர் மதன் மோகன் பிரசிடென்டாக நியமிக்கப்பட்டார். அவர் பள்ளியின் நிதி மேலாண்மை, அகாடமிக், பள்ளி வளாகம், கட்டமைப்பு என முழுவதுமாக மாற்றினார். 2020ல் ஆல்டிஸ் மற்றும் அவரது கணவர் ரூடின் ஜாஸ்பர்ஸ் இறந்த பிறகு, 2021 வரை அவர் தான் தலைவராக இருந்தார். 2022 முதல் நான் பிரசிடென்ட் கம் கரஸ்பான்டன்டாக இருந்து வருகிறேன். நாங்க ஒரு சின்ன டீம். ஆனால், பெரிய அளவில் உழைக்கிறோம்’’ என்று அருணாச்சலா பள்ளியின் வரலாற்றை விவரித்தார்.

‘‘எனக்கு பக்கத்து கிராமம்தான். இந்தப் பள்ளியை பற்றித் தெரியும். ஆரம்பம் முதல் வாலன்டரியராகத்தான் நான் இங்கு பணியாற்றி வந்தேன். நான் சென்னையில் விஷூவல் கம்யூனிகேசன் முடித்து 4 வருடங்களாக வேலை செய்து வந்தேன். பணியில் இருந்து சில காலம் பிரேக் எடுக்க ஊருக்கு வந்தேன். அப்போது இடைப்பட்ட காலத்தில் பள்ளியில் பணியில் சேர்ந்தேன். தற்போது என்னுடைய தலைமையில் பள்ளியை கவனித்து வருகிறேன்.

நாங்களே முயற்சித்து கம்பெனி, தனிநபர்கள் உதவிகள் மூலமும் நிதி வசூல் செய்தும் ஸ்விட்சர்லாந்து சென்றும் நிதி பெற்று வருகிறோம். பெறு நிறுவன சமூகப் பொறுப்பு அமைப்பு (CSR) மூலமும் உதவிகள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 42 குழந்தைகளுடன் ஆரம்பித்த பள்ளி. இன்று 292 குழந்தைகள் படிக்கிறார்கள். கிண்டர் கார்டன் முதல் 5ம் வகுப்பு வரை இயங்குகிறது. குழந்தைகளுக்கு தேவையான ஸ்டேஷ்னரி, யூனிஃபார்ம்ஸ், ஷூஸ் எல்லாம் நாங்களே தந்து விடுவோம். சாப்பாடு வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும். முட்டை, சுண்டல் போன்ற இணை உணவுகள் மட்டும் வழங்குவோம்’’ என்றவர் பள்ளியின் செயல்பாடு குறித்து கூறினார்.

‘‘இது கிராமப்புறங்களில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்காக தொடங்கப்பட்ட கட்டணமில்லா லாப நோக்கமில்லா பள்ளி. இந்தப் பள்ளியில் பெற்றோர் இல்லாத பிள்ளைகள், சிங்கிள் பேரன்ட் குழந்தைகள் மற்றும் பின்தங்கிய விவசாய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சேர்க்கையில் முன்னுரிமை தருகிறோம். பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்கிறோம். அவர்களை நேர்முகத் தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கிறோம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி வழங்கிய பிறகு அவர்கள் பாடங்களை எடுக்கலாம். குழந்தைகள் ஆசிரியர்களை அக்கா என்றுதான் அழைப்பார்கள். எங்க பள்ளியில் மற்ற பள்ளிகளில் இருப்பது போல் பாடத்திட்டங்கள் இருக்காது.

‘ஃபீல் அண்ட் லேர்ன்’ என்றதைதான் நாங்க பின்பற்றினாலும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை புத்தகங்களைதான் பயன்படுத்துகிறோம். ஆனால், கற்பித்தல் முறை என்பது முற்றிலும் வேறானது. ‘லைஃப் எஜூகேஷன்’ என்று ஒரு சிஸ்டம் வைத்துள்ளோம். 60% லைப் எஜூகேஷனும், 40% அகாடமிக் என்ற முறையில் எங்க பள்ளியின் கற்பித்தல் முறையை பிரித்துள்ளோம்’’ என்றவர் பள்ளியின் கற்பித்தல் முறையை பற்றி விளக்கினார்.‘‘லைஃப் எஜூகேஷனில் முதலாவதாக காலையில் வந்ததும் மெடிடேசன் தொடங்கி ஒரு மணி நேரம் விவசாயம் செய்வார்கள்.

ஒவ்வொரு வகுப்புக்கும் தனிப்பட்ட நிலம் தந்துவிடுவோம். அவங்க அதில் காய்கறிகள், கீரைகள் என எதுவேண்டுமானாலும் விளைவித்துக் கொள்ளலாம். காய்கறிக் கழிவுகளை பயன்படுத்தி அவர்களே ஜீவாமிர்தம், மண் புழு உரங்களையும் தயாரித்துக் கொள்வார்கள். விவசாயத்தில் கிடைக்கும் காய்கறிகளை குக்கிங் வகுப்புக்கும் வீட்டிற்கும் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் இயற்கை உரங்களை பயன்படுத்த பெற்றோர்களையும் அறிவுறுத்துவார்கள். நெருப்பு மற்றும் நெருப்பில்லாமல் சமையல் மற்றும் பேக்கிங்கும் சொல்லித் தருகிறோம். இதைத் தவிர கூடைப் பின்னுதல், மரவேலைப்பாடு, சிலை வடித்தல், மண்பாண்டம் செய்தல், பனையோலை பொருட்கள் செய்தல் என பத்துவிதமான கைவினைகளையும் கற்பிக்கிறோம்.

மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்குள்ள இன்ஸ்பெக்டருடன் உரையாடி 144, FIR பற்றியெல்லாம் தெரிந்து கொள்வார்கள். நீதிமன்றத்திற்கும் அழைத்துச் செல்கிறோம். RTO அழைத்து சென்று வாகன சோதனை பற்றியும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அழைத்துச் சென்று அங்குள்ள செயல்பாடுகளை குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம்.

குறிப்பாக 5ம் வகுப்பு மாணவர்களை மாதத்தில் நான்கு முறை வெளியில் அழைத்துச் சென்று லைஃப் எஜூகேஷன் தருகிறோம். வெளியில் சென்று வந்தவுடன் அவர்களின் அனுபவங்களை கடிதமாக எழுதியும் படமாக வரைந்தும் தரச் சொல்வோம். தற்போது 19 முழு பணிநேர ஆசிரியர்களும், கணினி, நூலகம், கைவினைகள் கற்றுத்தர 7 பகுதி நேர ஆசிரியர்களும் உள்ளனர். எல்லா வகுப்புக்கும் இரண்டு செக்‌ஷன்கள் உள்ளன. கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கு மலர்கள் பெயரிலும் பிரைமரி வகுப்புகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயரிலும் இருக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை அகாடமிக் பாடங்கள் நடக்கும், சனிக்கிழமை ‘நோ புக் டே’. அன்று கைவினைகளை கற்றுத் தருவோம். இதைத் தவிர மல்லர் கம்பம், யோகா, சிலம்பம் போன்றவையும் சொல்லித் தருகிறோம்.

கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு என்ற கருத்து உள்ளது. ஆனால், எங்க மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவார்கள்.நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களை கற்பிப்பதால் அவர்களின் கல்வித் தரமும் உயர்ந்துள்ளது. 21 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில்தான் எங்க பள்ளி இயங்கி வருகிறது. வயதுக்கு அதிகமான கல்வியை போதிக்காமல் வயதுக்கேற்ற படிப்பை சொல்லித் தருவதால் அவர்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக படிக்கிறார்கள்.

வருடத்தில் மார்ச் மாதம் அட்மிஷன் தொடங்குவோம். அதில் 42 குழந்தைகளை தேர்ந்தெடுப்பது சற்று சவால்தான். உயர்பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து பரிந்துரைகள் வரும். ஆனால், சேர்க்கையின் போது நாங்க சொன்ன மூன்று விதமான குழந்தைகளுக்கு முன்னுரிமை என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுவரை 1300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளார்கள். எங்களிடம் படித்த மாணவர்களின் குழந்தைகளும் இங்கு படிக்கிறார்கள். படித்த மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு உயர் கல்வி மற்றும் நிதி உதவிகள் மூலம் துணையாகவே பயணிக்கிறோம்’’ என்கிறார் ரம்யா.

‘‘சனிக்கிழமைகளில் எங்கள் பழைய மாணவர்களும் விருப்பமாக வந்து எங்கள் பணிகளில் பங்கெடுப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டை கவனிப்பது போல் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து பள்ளியை பார்க்க பழகி இருக்கிறோம். இங்கு ‘உதவி மணி’ என்று வளாகத்தில் ஒரு மணியை கட்டி வைத்திருக்கிறோம். மாலை 6 மணி முதல் காலை பள்ளிக்கு வருவதற்கு முன்பு வரை யாருக்கேனும் உதவினால் மணி அடிக்க வேண்டும். மணிச் சத்தம் கேட்கும் போது நாமும் உதவ வேண்டும் என்ற உணர்வு மற்ற மாணவர்களுக்கு வரும். இதேபோல் ‘மாணவர் மனசு’ என்ற லெட்டர் பாக்ஸ், ‘ஹானஸ்ட் ஷாப்’ என்ற கடை ஆகியவையும் பள்ளியில் இருக்கின்றன.

இதைத் தவிர ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ‘பேரன்டிங்’ தொடர்பான ஆலோசனைகளையும் தருகிறோம். மேலும், பள்ளியை உயர் வகுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். சிறு குழந்தைகளை பெரிய கனவை நோக்கி நடை போட வைக்க வேண்டும் என்று சொன்ன ஆல்டிஸ், ஜாஸ்பர் வழி டிரஸ்ட் சார்ந்த ஒவ்வொரு நிலை பணியாளர்களுடன் நானும் உழைக்கிறேன்’’ என்கிறார் அர்ப்பணிப்புடன் இளம்பெண் ரம்யா.

செய்தி:ஏ.கே.

படங்கள்:திவாகர்

Tags : saffron ,
× RELATED காலம் காலமாக மவுசு குறையாத கயிற்றுக்கட்டில்!