×

பெண்ணின் குடும்பத்தை ஊரைவிட்டு விலக்கி வைத்த விவகாரம் கட்டப்பஞ்சாயத்து என தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர், எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரியில் பெண்ணின் குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லனகுப்பம் கிராமத்தை சேர்ந்த ரேவதியிடம், அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தன்னுடைய நிலத்துக்கு செல்வதற்கான பாதை அமைப்பதற்காக ஒரு பகுதி நிலத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ரேவதி மறுக்கவே இந்த விவகாரத்தை ஊர் பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றனர்.

ஊர் தலைவர்களான முனிரத்தினம், வெங்கடேசன் ஆகியோர் ரேவதியின் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து 2022 பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர். அதன்படி பொது குடிநீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கக் கூடாது. கோயிலில் வழிபாடு நடத்தக்கூடாது, அவர்களுக்கு மளிகை சாமான் விற்கக்கூடாது. அவரது குடும்ப நிகழ்வுகளில் கிராமத்தார் எவரும் கலந்துகொள்ளக் கூடாது. இந்த உத்தரவுகளை ரேவதி மீறினால் ஒரு லட்ச ரூபாய் அபராதமும், கிராமத்தினர் மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கட்டப் பஞ்சாயத்தின் இந்த உத்தரவு மனித உரிமையை மீறிய செயல் என்பதால், கட்டப்பஞ்சாயத்துதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், குருபரபள்ளி காவல் நிலையம் ஆகியோரிடம் ரேவதி புகார் அளித்தார். தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ரேவதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியதில், இதுபோன்று ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில் அரசு தரப்பின் இந்த வாதத்தை மறுத்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனரா, இல்லையா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றது விசாரணையில் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Katta ,Panchayat ,SP ,Chennai ,Madras High Court ,Krishnagiri ,Revathi ,Pillanakuppam ,Krishnagiri district ,Krishnan ,
× RELATED தமிழகத்தின் கோடீஸ்வர வேட்பாளர்:...