×

கஸ்தூரிபா நகர் முதல் திருவான்மியூர் வரை பக்கிங்காம் கால்வாய் கரையில் ரூ.45 கோடியில் பசுமை பூங்கா: மாநகராட்சி திட்டம்

சென்னை: கஸ்தூரிபா நகர் முதல் திருவான்மியூர் வரை, பக்கிங்காம் கால்வாய் கரையில் ரூ.45 கோடியில் பசுமை பூங்கா மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கான பிரத்யேக பாதைகள், மிதிவண்டி தடங்கள் மற்றும் அடர்ந்த மியாவாக்கி காடுகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்த திட்டம் அமையவுள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் செயற்கையாக உருவாக்கபட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக, மக்களுக்கு வேலை கொடுப்பதற்கு, சுமார் 5 கி.மீ தூரத்துக்கு வெட்டப்பட்டு, அதன்பிறகு பல்வேறு நீர் நிலைகளுடன் இணைக்கப்பட்டு, மிகப்பெரிய கால்வாயாக பக்கிங்காம் கால்வாய் மாறியது. இந்த கால்வாய் மூலமாக வணிகம், போக்குவரத்து என 1960ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாடும், ஆந்திராவும் பெரும் பயனடைந்து வந்தன. தென்னிந்தியாவின் முக்கிய நீர்வழிப் பாதையாகவும் ஒரு காலத்தில் பக்கிங்காம் கால்வாய் அமைந்திருந்தது.

ஆந்திரா மாநிலத்தையும், தமிழகத்தையும் உள்ளடக்கிய, இந்த கால்வாய், காலப்போக்கில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு, பராமரிக்கப்படாமலும், பல்வேறு ஆக்கிரமிப்புகள், இயற்கை சீற்றங்களாலும் தனது அடையதளத்தை இழந்து, தற்போது சென்னையில் கழிவுநீரோடும் கால்வாயாக இருக்கிறது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்து இந்த பக்கிங்காம் கால்வாயை, பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தொடர்ச்சியான நடைபாதை, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்கள், அமர்வதற்கான இருக்கை வசதிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கான தனிப்பாதை ஆகியவை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பறக்கும் ரயில் நிலையங்களுக்கு அருகே ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட பசுமை திட்டங்களின் வெற்றியை தொடர்ந்து, இந்த புதிய முயற்சியும் பொதுமக்களுக்கு தேவையான திறந்தவெளி இடங்களை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. கால்வாய் கரைகளில் மண்ணின் தன்மையை மேம்படுத்தவும், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் உள்ளூர் வகை மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. குறிப்பாக, குறைந்த இடத்தில் அதிக மரங்களை வளர்க்கும் ‘மியாவாக்கி’ முறையிலான காடுகள் உருவாக்கப்படவுள்ளன. இவை காற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு, நகர்ப்புற வெப்பத்தை குறைக்கவும் பெரிதும் உதவும். மேலும், தாழ்வான பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க, இயற்கையை அடிப்படையாக கொண்ட நவீன வடிகால் அமைப்புகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு
பக்கிங்காம் கால்வாய் ஒரு காலத்தில் சென்னையின் மிக முக்கியமான நீர்வழி போக்குவரத்து பாதையாக இருந்தது. ஆனால், கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்புகள் மற்றும் பராமரிப்பின்மை காரணமாக இது சிதைந்து போனது. இந்நிலையில், சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதற்கும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது இடங்களை உருவாக்குவதற்கும் இத்தகைய திட்டங்கள் மிக அவசியம் என நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

வெள்ள தடுப்பு
பருவமழை காலங்களில் கால்வாயில் நீரோட்டத்தை சீராக்கி வெள்ளத்தை குறைக்க இந்த திட்டம் உதவினால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகின்றனர். திட்டத்தை தொடங்குவதோடு மட்டுமல்லாமல், அதனைச் சரியான காலக்கெடுவுக்குள் முடிப்பதும், எதிர்காலத்தில் முறையாக பராமரிப்பதும் மிக முக்கியம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

Tags : Buckingham Canal ,Kasturiba Nagar ,Thiruvanmiur ,Chennai ,Municipal Corporation ,Miyawaki ,
× RELATED பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு