பழநி: கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை சமூக மக்கள் பழநி தொகுதி அதிமுக வேட்பாளர் மீது அதிருப்தியாக இருப்பதால், வாக்குகள் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு திரும்ப வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ரவிமனோகரன் என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 728, பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 582, 3ம் பாலினத்தவரின் 49 என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், 45% சதவீத வாக்காளர்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளனர். இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் 2 பிரதான சமூகத்தினர் வசிக்கின்றனர். இதில், குறைவான எண்ணிக்கையில் உள்ள சமூகத்தினருக்கு அதிமுக வேட்பாளர் ரவிமனோகரனின் பரிந்துரையின் பேரில் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பெரும்பான்மை சமூகத்தினர் அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே மேல்மலை பகுதியில் நடந்த அதிமுக செயல்வீரர் கூட்டத்தை பெரும்பான்மை சமுதாயத்தினர் புறக்கணித்துள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டிக்கு ஆதரவான மனநிலையில் பெரும்பான்மை சமூகத்தினர் உள்ளனர். சொந்தக் காசில் சூனியம் வைத்ததைப் போல கட்சிப் பதவிகளுக்கு அதிமுக வேட்பாளரின் பரிந்துரை, அவருக்கே எதிராக திரும்பிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
