×

உள்ளே கட்டிப்பிடி வைத்தியம் வெளியே வந்ததும் கும்மாங்குத்து!

 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சிட்டிங் பாமக எம்எல்ஏவான அருள் வந்திருந்தார். அவர், தனக்கு முன்னால் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த தவெக வேட்பாளரான ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லட்சுமணனை ஆரத்தழுவி கட்டிப்பிடித்து வாழ்த்து கூறினார். அப்போது இருவரும் கை குலுக்கிக்கொண்டு, பாசமழையை பொழிந்தனர். வேட்பாளர் லட்சுமணனுடன் வந்திருந்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் விஜய் தமிழன் பார்த்திபனையும், அருள் எம்எல்ஏ கட்டிப்பிடித்து வாழ்த்தினார். அப்போது தமிழன் பார்த்திபன், “அண்ணன் அருள் எங்களுக்கு அரசியல் ஆசான், அவரை நாங்கள் பின்தொடர்கிறோம். போட்டி களத்தில் எதிரெதிர் நின்றிருந்தாலும், நாங்கள் உள்ளுக்குள் நட்பாக இருப்போம்,’’ என்றார். இதைத்தொடர்ந்து தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார்.

அவரது காலில் விழுந்து அருள் எம்எல்ஏ ஆசி பெற்றார். பிறகு அருள் எம்எல்ஏ, தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் லட்சுமணன், இதற்கு முன் இன்ஸ்பெக்டராக இருந்தபோது லஞ்சம் வாங்கி எப்படி சம்பாதித்தார் என்பது எல்லாம் உங்களுக்கு தெரியும். லஞ்சத்தால் திளைத்த அவரோட பெயரை சொன்னாலே போதும்,’’ என்றார். உள்ளே தவெக வேட்பாளருடன் கட்டிப்பிடி வைத்தியத்தில் ஈடுபட்ட அருள் எம்எல்ஏ, வெளியே வந்ததும் கும்மாங்குத்து போட்ட சம்பவம் அங்கிருந்த கட்சியினரிடையே, “இதுவல்லவா அரசியல்’’ என முணுமுணுக்கச் செய்தது.

 

Tags : Bamaka MLA ,Salem West Assembly Constituency ,Inspector ,Lakshmanan ,
× RELATED தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில்...