×

பெண்களின் உடல் உறுப்புகளை ‘ஜூம்’ செய்து படம் பிடிப்பது அநாகரிகம்: போட்டோகிராபர்களுக்கு நடிகை கண்டனம்

மும்பை: தனது 15 வயது கசப்பான அனுபவம் குறித்தும், தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது உருவம் தவறாக சித்தரிக்கப்படுவது குறித்தும் ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார். பிரபல நடிகை ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், ‘நான் பள்ளி மாணவியாக இருந்த போது ஒருமுறை கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்றேன். அப்போது அங்குள்ள மாணவர்கள் வேடிக்கைக்காக சில ஆபாச இணையதளங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் எனது புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

15 வயதிலேயே எனது புகைப்படம் ஆபாச இணையதளத்தில் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. மிகவும் விசித்திரமான அனுபவமாக அமைந்தது. அப்போது இதுபோன்ற சமூக வலைதள விஷயங்களில் ஒழுக்கம் கிடையாது. இதை நாம் சகித்துதான் ஆக வேண்டும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். ஆனால் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் எனது உருவத்தை ஆபாசமாக சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அணியாத ஆடைகளை அணிந்திருப்பது போலவும், நான் போஸ் கொடுக்காத விதத்திலும் புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதுபோன்ற படங்கள், வீடியோக்கள் மக்களிடையே என்னைப் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்குகிறது.

ஒரு இயக்குனர் என்னிடம் ஒரு ஆடையை அணியச் சொல்லும் போது, எனக்கு விருப்பமில்லை என்று சொன்னால், உடனே இந்த போலி புகைப்படங்களை காட்டி நீங்கள் ஏற்கனவே இதுபோல நடித்துள்ளீர்களே என்று கேட்கும் சூழல் உருவாகிறது. சமீபத்தில் கூட புகைப்பட கலைஞர்களிடம் நான் பேசும் போது, பெண்களின் உடல் உறுப்புகளை ஜூம் செய்து படம் பிடிப்பது அநாகரிகமானது என்று கூறினேன். பணம் மற்றும் வியூஸ்காக ஒரு பெண்ணின் உடலை அவரது சம்மதம் இன்றி காட்சிப்படுத்துவது தவறானது. தற்போது எனக்கு பெரிய அளவில் அதிகாரம் இல்லை என்பதால், என்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பயந்து அமைதியாக இருக்கிறேன். தகுந்த காலம் வரும்போது இதுகுறித்து நிச்சயம் குரல் கொடுப்பேன்’ என்று கூறினார்.

Tags : Mumbai ,Janhvi Kapoor ,
× RELATED ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST...