பாட்னா: ஒன்றிய அரசு மாநிலங்களை சமபங்காளிகளாக கருத வேண்டும், தங்களுக்கு கீழ்பட்டவையாக கருதக்கூடாது என்று உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து தெரிவித்தார். ‘உரிமைகளுக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்புவாதம்: கட்டமைப்பு ஏன் முக்கியம்?’ என்ற தலைப்பில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சாணக்கியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது: ஒன்றிய அரசு மாநிலங்களை தங்களுக்கு கீழ்ப்பட்டவையாக அல்லாமல், சம பங்காளிகளாகவே கருத வேண்டும். அதிகாரப் பிரிவினை என்பது சம அந்தஸ்து கொண்ட அமைப்புகளுக்கு இடையிலான ஒரு அரசியலமைப்பு ஏற்பாடு. ஒன்றிய-மாநில உறவுகள் தொடர்பான விவகாரங்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.
ஒன்றியத்திலும், மாநில அளவிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைச் சார்ந்ததாக நிர்வாகம் இருக்கக்கூடாது. மேலும் கூட்டாட்சித் தத்துவம் என்பது தன்னாட்சி பற்றியது மட்டுமல்ல, மாறாக தனித்தனி அதிகார மையங்களைக் கொண்டது. ஒவ்வொரு மையமும் மற்றொன்றுக்கு ஒரு எதிர்சக்தியாகச் செயல்படும் திறன் கொண்டது. எனவே நிர்வாகம் என்பது ஒருதலைப்பட்சமான கட்டளையாக இல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் அமைவதை இது உறுதி செய்கிறது.
எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிக அளவிலான ஒருங்கிணைப்பு இருப்பதுதான் இன்றைய காலத்தின் தேவையாகும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தவிர, மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்குக் கீழ்ப்பட்டவை அல்ல. ஆகையால், ஆட்சியில் எந்த அரசியல் கட்சிகள் இருந்தாலும் பரவாயில்லை; மாநில அரசுகளுக்குச் சேர வேண்டிய உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒன்றிய-மாநில உறவுகள் என்பது அரசியலமைப்பு சார்ந்த நிர்வாகத்தின் வரம்பிற்குள் வருவதால், மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்களையோ ஒதுக்கி வைக்க வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனித்தனியே முன்னெடுக்கும் நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் பலன்கள் குடிமக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
அதனால்தான், இந்திய அரசியலமைப்பானது ‘கட்டமைப்பில் கூட்டாட்சித் தன்மையுடனும், உணர்வில் ஒற்றையாட்சித் தன்மையுடனும்’ திகழ்கிறது என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஒரு மாநிலத்தின் குடிமக்கள் மேம்பாட்டு விவகாரங்களில் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படக்கூடாது. ஒரு மாநிலத்தின் குடிமக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் என்று வரும்போது, மாநிலங்களிடத்தில் தேர்ந்தெடுத்துச் செயல்படும் அணுகுமுறை இருக்கக்கூடாது. ஒரு நியாயமான அணுகுமுறையாக, சமத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அரசியல் செயல்முறைகளால் பாதிக்கப்படாமல் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்தல் என்பது, நெருக்கடியான தருணங்களில் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியாக மட்டுமே பார்க்கப்படக்கூடாது; மாறாக, அது நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகளிலும் சமமாகப் பொதிந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* நீதிமன்றங்களை நோக்கி ஓடுவது பலவீனமான கூட்டாட்சி
நீதிபதி நாகரத்னா கூறுகையில்,’ ஒரு முதிர்ந்த கூட்டாட்சி அமைப்பு, எதிரிகளாகக் கருதிக்கொண்டு நீதிமன்றங்களை நோக்கி அவசரமாக ஓடக்கூடாது; அது பேச்சுவார்த்தை, இணக்கப் பேச்சு மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றை நாட வேண்டும். மாநிலங்கள் ஒன்றுக்கொன்று எதிராகவோ அல்லது ஒன்றிய அரசுக்கு எதிராகவோ வழக்குகள் தொடரத் தொடங்கும்போது, அது வலிமையை அல்ல, மாறாக கூட்டுறவு கூட்டாட்சியின் பலவீனத்தையே பிரதிபலிக்கிறது’ என்றார்.
* தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது: இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அரசியல் செயல்முறைகளால் பாதிக்கப்படக்கூடாது. தேர்தல் ஆணையத்தைத் தவிர்த்து, மற்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளும் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். இந்த நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதும், அரசியல் செயல்முறைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதும் மிக முக்கியமானது. அமைப்பு ரீதியான கட்டமைப்பு படிப்படியாகச் சிதைக்கப்படுவதன் மூலம் அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படக்கூடும்.
நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் கண்காணித்துச் சரிசெய்வதை நிறுத்தும்போதே, கட்டமைப்புச் சிதைவு ஏற்படுகிறது. அத்தகைய தருணத்தில், தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறலாம், நீதிமன்றங்கள் செயல்படலாம், நாடாளுமன்றத்தால் சட்டங்கள் இயற்றப்படலாம்; ஆயினும், கட்டமைப்பு சார்ந்த ஒழுக்கம் அங்கே இல்லாததால், அதிகாரம் திறம்படக் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேர்தல் ஆணையம், இந்தியத் தலைமைக் கணக்காயர், நிதிக் குழு ஆகிய அமைப்புகள் தனியானவை, சிறப்புத் தன்மை வாய்ந்தவை. இந்த நிறுவனங்கள் சுயச்சார்புடன் செயல்படுவதும், அரசியல் செயல்முறைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதும் மிக முக்கியமானது.
தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படுவதன் காரணமாக, அரசாங்கத்தில் ஏற்படும் சுமூகமான மாற்றங்களை நமது அரசியலமைப்பு ஜனநாயகம் மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. அந்தச் செயல்முறையின் மீதான கட்டுப்பாடு என்பது, உண்மையில், அரசியல் போட்டியின் சூழல்கள் மீதான கட்டுப்பாடே ஆகும். சட்டமன்றம் வரவிருக்கும் சட்டங்களை வெறும் ஒப்புதல் அளிக்கும் முத்திரையாக மட்டும் பார்க்காமல், அவை குறித்து ஆழமாக விவாதிக்கிறதா? என்பதையும், நிர்வாகத்துறை சட்டத்திற்கு மேலாகச் செயல்படாமல், சட்டத்திற்கு உட்பட்டே ஆட்சி நடத்துகிறதா? என்பதையும் சார்ந்தே அரசியலமைப்பின் ஆரோக்கியம் அமைகிறது. இவ்வாறு பேசினார்.
