×

செங்கல்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பச்சையம்மன் கோயில் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், குடியிருப்பு மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி துப்புரவு மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். பின்னர் இவற்றை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, இதில் மக்கும் குப்பைகளை கொண்டு சுத்தமான உரங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இக்கிடங்கில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடப்பதால், சாலையோரங்களிலும் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். அங்கு பரவி கிடக்கும் குப்பை கழிவுகளை ஆடு, மாடு, நாய், கோழி, பன்றி போன்ற உயிரினங்கள் கிளறிவிடுவதால், அப்பகுதி முழுவதிலும் கடும் துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில், இந்த குப்பை கிடங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென குப்பை கழிவுகளில் பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டனர்.

தகவலறிந்து செங்கல்பட்டு மற்றும் மகேந்திரா சிட்டி பகுதி தீயணைப்பு படையினர் 4 தண்ணீர் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போராடி, தண்ணீரை பீய்ச்சியடித்து குப்பைக் கிடங்கில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

 

Tags : Chengalpattu Municipal ,Chengalpattu ,Pachaiyamman Temple ,Chengalpattu Municipality ,
× RELATED ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக...