பந்தலூர், ஏப்.3: பந்தலூர் அருகே தேவாலா கைதக்கொல்லி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் அருகே தேவாலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கைதக்கொல்லி ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதிகளில் மொட்டை வாள் என அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகிறது. அதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தேவாலா கைதக்கொல்லி கிராமத்தில் பகல் நேரத்திலேயே நுழைந்த இந்த யானையை பார்த்த கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். அசைந்து அசைந்து நடந்து சென்ற யானையை பார்த்த மக்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் கூச்சலிட்டனர். அதன் பின் பிரதான சாலைக்கு சென்ற யானை பயணியர் நிழற்குடையை தாண்டிச் சென்றபோது பிளிறியதால் மக்கள் மேலும் அச்சமடைந்தனர். கிராமப்பகுதிக்குள் சுற்றித்திரியும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
